குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் - Finals, இன்று (24.07.2022) முடிவடைந்த நிலையில், வெற்றியாளர் யார் என்பதும் அறிவிக்கப்பட்டது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மிக முக்கியமான ஒன்று, குக் வித் கோமாளி.
பிரபலங்கள் போட்டியாளர்களாக வரும் இந்த நிகழ்ச்சியில், கோமாளிகளாக வரும் காமெடி நாயகர்கள் தான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்.
ஒரு சுற்றை வெற்றி பெறுவதற்கே கோமாளிகள் பங்களிப்பு, முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில், அவர்கள் சமையல் பற்றி எதுவுமே தெரியாமல், செட் முழுக்க அரட்டை அடித்துக் கொண்டே சுற்றி வருவார்கள். இதற்கு மத்தியில், நடுவர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோரும் அதகளம் செய்ய, குக் வித் கோமாளி நிகழ்ச்சி முழுக்க முழுக்க பொழுது போக்கிற்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கும்.
முன்னதாக, முதல் இரண்டு சீசன்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்ததால், தற்போது மூன்றாவது சீசனும் நடைபெற்று வந்தது. மொத்தம் 10 போட்டியாளர்கள் இதன் ஆரம்பத்தில் கலந்து கொள்ள, நடிகர் முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர், வைல்டு கார்டு என்ட்ரியில் உள்ளே வந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, இறுதிச் சுற்றில், ஸ்ருதிகா, அம்மு அபிராமி, வித்யுலேகா, தர்ஷன், சந்தோஷ் பிரதாப் மற்றும் கிரேஸ் ஆகிய ஆறு போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வானார்கள். இந்நிலையில், இன்று குக் வித் கோமாளியின் இறுதிச் சுற்றும் ஒளிபரப்பட்டிருந்தது. அனைத்து போட்டியாளர்களின் வித விதமான உணவுகள், கோமாளிகளின் காமெடி அலப்பறை என Finals களை கட்டிய நிலையில், அனைத்து சுற்றுகள் முடிவில், குக் வித் கோமாளி மூன்றாவது சீசனின் டைட்டில் வின்னராக ஸ்ருதிகா அறிவிக்கப்பட்டார். அங்கிருந்த மற்ற போட்டியாளர்கள் அவரைக் கட்டித் தழுவி வாழ்த்தி இருந்தனர்.
தொடர்ந்து, முதல் ரன்னர் அப்பாக தர்ஷனும், இரண்டாவது ரன்னர் அப்பாக அம்மு அபிராமியும் தேர்வானார்கள். முதல் ஆளாக, கடைசி சுற்றுக்கு தகுதி பெற்ற ஸ்ருதிகா, தற்போது வெற்றியும் பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதே வேளையில், குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசன் முடிவடைந்ததால், நான்காவது சீசன் சீக்கிரமாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.