கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு கட்டமாக நடைபெற்றுவந்த மக்களவைத் தேர்தலின் ஒரு பகுதியாக மே 23 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. இந்தத் தேர்தலில் இந்திய அளவில் பல்வேறு சினிமா பிரபலங்கள் போட்டியிட்டனர். அவர்கள் குறித்து ஒரு பார்வை:
பிரகாஷ் ராஜ்
ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என எந்த வேடம் கொடுத்தாலும் அதனை தன்னளவில் சிறப்பாக செய்யக் கூடியவர் பிரகாஷ் ராஜ் . ஆளும் பாஜக அரசை விமர்சித்து வந்த அவர், இந்த லோக் சபா தேர்தலில் கர்நாடகாவில் உள்ள மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக களம் கண்டார். இவர் தற்போதைய தேர்தல் முடிவுகளின் படி அவர் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
பிரபல நடிகர் அம்பரீஷின் மனைவியும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் நடித்தவருமான சுமலதா தற்போது கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதியில் களம்கண்டார். இவர் தற்போது அவர் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து நடிகரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி போட்டியிட்டார்.
ஊர்மிளா மடோன்கர்
ஹிந்தி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான மொழிப் படங்களில் நடித்தவர் ஊர்மிளா. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படத்தில் இவர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இவர் காங்கிரஸ் சார்பாக மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். தற்போது தேர்தல் முடிவுகளின் படி அவர் தோல்வியை அடைந்துள்ளார்.
ஜெயப்பிரதா
தமிழ் தெலுங்கு ஹிந்தி, கன்னம் எனப் பல்வேறு மொழிப்படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா, இவர் தற்போது பாஜக சாப்பாக உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூரில் போட்டியிட்டார். தற்போது தேர்தலின் முடிவுகளின் படி அவர் தோல்வியைத் தழுவியுள்ளார்.
ஹேமாமாலினி
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான ஹேமாமாலினி ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
சத்ருகன் சின்ஹா
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் சத்ருகன் சின்ஹா. இவர் இந்த லோக்சபா தேர்தலில் பீஹார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டார். தற்போதைய தேர்தல் முடிவுகளின் படி அவர் தோல்வியை தழுவியுள்ளார்.
ரவி கிஷன்
ஹிந்தி, தெலுங்கு, போஜ்புரி உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் ரவி கிஷன். இவர் பாஜக சார்பாக உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.
நிகில் கௌடா
முன்னாள் பிரதமர் தேவகெளடாவின் பேரனும் கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் கௌடா ஏராளமான கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவர் கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டார். தற்போதைய தேர்தலின் முடிவுகளின் படி அவர் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
ஸ்மிருதி இரானி
தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்படுபவர் ஸ்மிருதி இரானி. இவர் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி ஸ்மிருதி இரானி முன்னிலை வகிக்கிறார்.
சன்னி தியோல்
பிரபல ஹிந்தி நடிகர் சன்னி தியோல் பாஜக சார்பாக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகளின் படி அவர் அந்தத் தொகுதியை கைப்பற்றியுள்ளார்.
மன்சூர் அலிகான்
திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் மாலை நேர நிலவரப்படி 28638 வாக்குகளைப் பெற்று 4-ம் இடத்தில் உள்ளார்.