பிக்பாஸ் வீட்டுக்குள் அடுத்தடுத்து ஹவுஸ்மேட்ஸ்க்கு நெருக்கமான பலரும் வருகை தரும் விஷயங்கள் மிகப்பெரிய பரவசத்தை உண்டு பண்ணியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். வார இறுதியில் வந்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் அமர வைத்து, அவர்கள் செய்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி கமல்ஹாசன் அறிவுரைகளை வழங்குவார்.
இப்படியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 28 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி 98 நாட்கள் முதல் 106 நாட்கள் வரை நடந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 105 அல்லது 106 நாட்கள் வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதே சமயம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் ரவுண்ட் தொடங்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதாக ரசிகர்கள் கூறுவதுண்டு.
முன்னதாக நமீதா மாரிமுத்து தவிர்த்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாடியா முதன்முதலில் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து, அபிஷேக், சின்ன பொண்ணு, மதுமிதா, சுருதி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது ராஜூ, சிபி, வருண், நிரூப், அக்ஷரா, தாமரைச்செல்வி, பிரியங்கா, அமீர், பாவனி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர். இவர்களைக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னுடைய இறுதி கட்டத்தை எட்டி வருகிறது என்பதுதான். இவர்களுள் அமீர் மற்றும் சஞ்சீவ் இருவரும் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தவர்கள். முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக, பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து பின்னர் திரும்பவும் எலிமினேட் ஆனார்.
தற்போது பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே மிகவும் தீவிரமான டாஸ்குகள் அரங்கேறி வந்த சூழ்நிலையில் போட்டியாளர்களின் நெருக்கமான உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தர தொடங்கியிருக்கின்றனர். அதன்படி அக்ஷராவின் தாயாரும் அண்ணாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகைதந்து அக்ஷராவை நெகழ்ச்சி படுத்தினர். இவர்களைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து, கிட்டத்தட்ட அக்ஷரா அழுதுவிட்டார்.
இதேபோல் தற்போது சிபியை பார்க்க, மும்பையிலிருந்து ஒரு பெண் வருகை தந்திருக்கிறார். அவர் சிபிக்கு என்ன உறவுமுறை என்று ஹவுஸ்மேட்ஸ்களுக்கு முதலில் தெரியவில்லை, எனினும் அவரை கண்டதும் சிபி கட்டிப்பிடிததார். பின்னர் ஹவுஸ் மேட்ஸ் முன்னிலையில் வந்து இவர்கள் நிற்க, உற்சாகமான பிரியங்கா தங்கள் முன்னிலையிலும் ஒரு முறை கட்டிப் பிடிக்கச் சொல்லி கூறுகிறார். அப்போதும் சிபி அப்பெண்ணை கட்டிப்பிடிக்க, பிரியங்கா உற்சாகத்தில் ஐயோ ஐயோ என ஆர்ப்பரித்துக் கொண்டே வருணை கட்டிப்பிடிக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாகவே போட்டியாளர்களின் உறவினர்கள் வரும்பொழுது, சம்பந்தப்பட்ட போட்டியாளர்களுக்கு அவர்கள் சில அறிவுரைகளை வழங்குவார்கள். குறிப்பாக வெளியிலிருந்து பார்ப்பதற்கு குறிப்பிட்ட அந்த போட்டியாளர் எப்படி தெரிகிறார்? உள்ளிட்ட பல மதிப்பீடுகளை முன்வைப்பார்கள். இது போட்டியாளர்களுக்கு இன்னுமொரு தெளிவைக் கொடுக்கும்.
ஒருவேளை மனம் உடைந்து போயிருந்தாலோ, வீட்டு நினைவால் சோர்வடைந்திருந்தாலோ உறவினர்கள் வரும்போது போட்டியாளர்கள் இயல்பு நிலைக்கு வருவார்கள். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் உறவினர்கள் வரத்தொடங்கி இருப்பது அவர்களிடையே உற்சாகத்தை உண்டுபண்ணும் என்பது நிச்சயம்.