பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் மணிரத்னம்.
இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1" செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
அதே போல, பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இன்னும் 10 நாட்களே இருப்பதால், பொன்னியின் செல்வன் படக்குழு படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக கேரள மாநிலம் சென்றிருந்தனர்.
அப்போது அங்கே நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செண்டை மேளம் வாசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில், நடிகர் விக்ரம் களத்தில் இறங்கி, செண்டை மேளம் அடிக்கத் தொடங்கினார். இது தொடர்பான வீடியோ ஒன்றை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் தனது கேப்ஷனில், "செண்டையுடன் உங்களின் இதய துடிப்பு sync ஆவதை போல வேறு ஏதும் அமைவதில்லை" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.