அமரர் கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1", நேற்று (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
பல ஆண்டு காலமாக, பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏராளமான திரை பிரபலங்கள் முயற்சிகளை மேற்கொண்டனர்.
சுமார், 50 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் சினிமாவின் இந்த கனவு, இயக்குனர் மணிரத்னத்தால் தற்போது நிறைவேறவும் செய்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் வெளியானது முதல் உலகம் முழுக்க பிரம்மாண்டமான வரவேற்பும் வழங்கப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் 1 படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், கிஷோர், சோபிதா, ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தொடர்ந்து, பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் பேசும் விக்ரம், "பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு, ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த ஆக்ரோஷம் மற்றும் விமர்சனம் அனைத்திற்கும் நன்றி. நான் நிறைய திரைப்படங்கள் நடித்துள்ளேன். நிறைய நல்ல கதாபாத்திரங்கள் செய்துள்ளேன். எப்பொழுதுமே நான் நடிக்கும் படத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுவேன். என்னுடைய படம் ,என்னுடைய கதாபாத்திரம் என நினைப்பேன்.
ஆனால் ட்விட்டர், இன்ஸ்டா, ஊடகம் என அனைவரும் இது எங்களுடைய படம் என கொண்டாடுகிறீர்கள். இது மனதை நெகிழ வைக்கிறது. இதைவிட எந்த ஒரு நடிகனுக்கும் பெரிய சந்தோஷம் கிடைக்காது. அனைவருக்கும் நன்றி. தேங்க்ஸ் மணி சார், மேலும் இந்த படம் உருவாக காரணமாக இருந்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்" என நெகிழ்ந்து போய் விக்ரம் குறிப்பிட்டுள்ளார்.