விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா படத்தின் பாடல் வெளியீட்டு விழா, Phoenix Market City-ல் வைத்து இன்று (11.07.2022) நடைபெற்றது.
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, கோப்ரா திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.
மேலும், இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.
கோப்ரா இசை வெளியீட்டு விழா
லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதியன்று கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தொடர்ந்து, கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில், நடிகர் விக்ரம், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குனர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர் லலித் குமார், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், துருவ விக்ரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விக்ரம் கொடுத்த பதிலடி
இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் விக்ரம் பேசி இருந்த சில விஷயங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வலம் வந்து, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், பின்னர் விக்ரம் தரப்பில் இருந்து, அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும், சாதாரண நெஞ்சு வலி தான் என்றும் உறுதியான தகவல் வெளியானது. இதனால், அனைத்தும் வதந்தி என்பதும் உறுதியானது.
தனது உடல்நிலை குறித்து கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்ரம், நெஞ்சின் மீது கை வைத்து பேசிய நிலையில், "தெரியாமல் நெஞ்சின் மீது கை வைத்து விட்டேன். இப்போ உடனே ஹார்ட் அட்டாக் என சொல்லி விடுவார்களே" என நக்கலாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய விக்ரம், தனது உடல்நிலைக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும், ரசிகர்களை சந்திப்பதற்காக தான், நான் இன்று வந்தேன் என்றும் தெரிவித்தார். அதே போல, தனக்கு மாரடைப்பு என வதந்திகள் பரவியதை தானும் கவனித்ததாகவும், ஆனால் நான் நன்றாக இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தவே இன்று வந்தேன் என்றும் விக்ரம் தெரிவித்துள்ளார்.
மேலும், மகனும் நடிகருமான துருவ் விக்ரமையும் மேடையில் நின்ற படி, ஜாலியாக சில விஷயங்களில் கலாய்த்து பேசவும் செய்தார் விக்ரம். தனது உடல்நிலை குறித்த வதந்தியை பற்றி, மேடையிலேயே விக்ரம் பதிலடி கொடுத்தது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.