ஹைதராபாத்: 10, பிப்ரவரி 2022:- ஆந்திராவில் சினிமா டிக்கெட்டுகளை அரசு சார்பில் மட்டுமே விற்கப்பட வேண்டும் என்கிற பரபரப்பு திரைப்பட ஒழுங்குமுறை திருத்த சட்டம் அமலுக்கு வருவிருப்பதாக அண்மையில் வெளியான தகவல் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
திரைப்பட ஒழுங்குமுறை சட்டம்
முன்னதாக ஆந்திரப் பிரதேச மாநில அரசு இந்த புதிய திரைப்பட ஒழுங்குமுறை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு பேரவையின் ஒப்புதலை பெற்றதாக தகவல்கள் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து அரசு சார்புடைய சமூக வலை தளங்களில் திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப் பட்டு, மேற்படி திரைப்படங்கள் ஒரு நாளைக்கு 4 காட்சிகளாக திரையிடப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.
வரி ஏய்ப்பு செய்ய முடியாது
குறிப்பாக, இதன்மூலம் அதிக காட்சிகளை ஓட்டி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ய முடியாது என்று ஆந்திர திரைத்துறை தொடர்பான அமைச்சர் நானி தெரிவித்திருக்கிறார். எனினும் தெலங்கானா, ஆந்திரா என இரு மாநிலங்களிலும் தெலுங்கு திரைப்பட திரையிடலுக்கான முறைகள் வேறுவேறாக இருக்கும் பட்சத்திலும், திரைப்பட கட்டணங்கள் இப்படியான மாற்றங்களுடன் இருக்கும்போதும், தயாரிப்பாளருக்கு இந்த புதிய சட்டத்திருத்தம் நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என்று கருத்துக்கள் நிலவின.
மெகா பட்ஜெட் படங்கள்..
அந்த சமயத்தில் பிரபல தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி உட்பட நடிகர்கள் பலரும் அரசின் இந்த புதிய திரைப்பட ஒழுங்குமுறை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்திருந்தனர். இதனிடையே தென்னிந்தியாவின் மெகா பட்ஜெட் படங்களான ஆர்.ஆர்.ஆர், ராதே ஷியாம், கேஜிஎஃப் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வரவுள்ளன.
முதல்வருடன் சந்திப்பு
இந்நிலையில் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, பிரபாஸ், மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி உள்ளிட்ட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சிலர் இன்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பில், 5 காட்சிகள் திரையிடுப்படுவது, Pan India திரைப்படங்களுக்கு சிறப்பு டிக்கெட் கட்டணங்கள், விசாக பட்டிணத்தில் திரைத்துறை இயங்குவதற்கான சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த வாக்குகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கென முதல்வருக்கு நடிகர் சிரஞ்சீவி நன்றி கூறியதுடன், இந்த சந்திப்பில் இருந்து எட்டப்பட்ட முடிவுகள் அதிகாரப்பூர்வ ஆந்திர அரசின் அறிவிப்புகளாக வரும் பிப்ரவரி 3வது வாரத்தில் வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனிடையே இதே தினத்தில் மண நாள் காணும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தமது இந்த திருமண நாள் ஸ்பெஷலாக அமைந்ததாகவும் குறிப்பிட்டு அனைவரும் ஒன்றாக விமானத்தில் பயணம் பண்ணும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.