இயக்குநர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் வடிவேலு ஹீரோவாக இரட்டை வேடங்களில் தோன்றி அசத்தினார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது. இதனையடுத்து இந்த படத்தின் அடுத்த பாகம் 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' என்கிற பெயரில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஷங்கர் தயாரித்து சிம்பு தேவன் இயக்கி வைகைப்புயல் வடிவேலு நடிக்க, விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தடைப்பட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.
இந்நிலையில் வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குநர் சிம்பு தேவன் ஒரு படத்தை இயக்கவுள்ளார். அந்த படம் குறி்தது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
அதில், 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படமும் விரைவில் தொடங்கும் என நம்பிக்கை இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சகோதரர் வெங்கட் பிரபுவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.