நடிகர் சேரன், படப்பிடிப்பில் தவறி விழுந்ததாக வெளியான தகவல் பற்றி தம்முடைய ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
கௌதம் கார்த்திக், சேரன், சிங்கம் புலி, சரவணன், சினேகன், விக்னேஷ் மற்றும் பலர் நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆனந்தம் விளையாடும் வீடு'.
இந்த படப்பிடிப்பின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. ஒரு வீடு இந்த படத்தில் முக்கியமாக வருகிறது. ஆம், அந்த வீட்டைக் கட்டுவது போன்ற காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறும். இது தொடர்பான காட்சியை படமாக்கும்போதுதான் நடிகர் சேரன் கால் இடறிக் கீழே விழுந்ததாகவும், அவருக்கு அடிபட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனை அடுத்து சேரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. எனினும் படப்பிடிப்பு பாதியில் நிற்கக் கூடாது என்று முழுமையாக நடித்துக் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சேரன், “நலம் விசாரிக்கும் நண்பர்களுக்கு வணக்கம்.. நலமாக இருக்கிறேன்.. பயம் ஒன்றும் இல்லை.. உங்களின் அன்பால், கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டேன் என்பதே சரி.. அனைவரும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருக்கவும்.. நன்றி அனைவர்க்கும்..” என்று தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே 'ஆனந்தம் விளையாடும் வீடு' படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் சென்னை திரும்பியிருக்கின்றனர்.