நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நீட் தேர்வின் அவசியம் குறித்து பெரும் விவாதங்கள் எழுந்துள்ளது.
பல்வேறு தரப்பினரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா நீட் தேர்வு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வு' பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு'வாழ்த்து' சொல்வதற்கு பதிலாக 'ஆறுதல்' சொல்வதை போல அவலம் எதுவுமில்லை.கொரானா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுத தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்று வேதனை தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கையில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து நடிகர் சூர்யாவின் கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மை, சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.