விஜய் டிவியில் ஒளிபரப்பாகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமான ஒன்று, குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது இதன் மூன்றாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
சமையல் தெரியாத கோமாளிகளுக்கு மத்தியில், போட்டியாளர்கள் படும் பாடு தான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட். அதே போல, இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோரும், சீரியஸாக இல்லாமல், முழுக்க முழுக்க ஜாலியாக தான் இருப்பார்கள்.
ரஜினிகாந்த் பற்றி செஃப் வெங்கடேஷ் பட்..
குக் வித் கோமாளி செட் எப்போதுமே உற்சாகத்துடன் காணப்படும் நிலையில், சமீபத்திய எபிசோடில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து, வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ள கருத்து, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இந்த எபிசோடின் போது, கோமாளிகள் அனைவரும் ரஜினிகாந்த் கதாபாத்திரங்களின் கெட்அப்பில் கலந்து கொண்டார்கள்.
என்னை வாழ்த்தவும் செஞ்சாரு..
அப்போது, ரஜினிகாந்த் குறித்து பேசிய பட், "1993 ஆம் ஆண்டு நான் Trainee ஆக இருந்தேன். Trainee வேலை என்பது, பிளேட் எடுப்பது, சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்வது போன்றதாகும். அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்கு வந்தார். அவர் சாப்பிட்டு முடித்ததும் அவரது டேபிளை நான் கிளீன் செய்தேன். என்னை பார்த்து ஹலோ என்றார். நானும் ஹலோ சார் என கூறினேன். தொடர்ந்து என்னைப் பற்றி அவர் கேட்க, நானும் என்னை பற்றி விவரித்துக் கொண்டேன். கடைசியில் நான் நன்றாக வருவேன் என்று வாழ்த்திவிட்டு சென்றார்.
ரஜினிகாந்த் கொடுத்த சர்ப்ரைஸ்
2002 ஆம் ஆண்டு வரை அவர் அங்கே வருவார். அதுவரை அவருக்கு பிடித்த உணவை நானே தனிப்பட்ட முறையில் சமைத்து அவருக்கு கொடுப்பேன். ஒரு தடவை டின்னர் முடிந்து, ரஜினிகாந்த் சார் குடும்பமும், மற்றொரு குடும்பமும் மட்டும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். அந்த டேபிளில் உள்ளவர்கள், 50வது திருமண நாள் விழாவை கொண்டாடிய படி இருக்க, ரஜினிகாந்த் சாருடன் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக் கொள்ள விருப்பப்டுகின்றனர். இது பற்றி, Waiter-யிடம் அவர்கள் கேட்க, ரஜினியை தொந்தரவு செய்ய முடியாது என பதிலளித்தார்.
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்த ரஜினிகாந்த், Waiter-ஐ அழைத்து இது பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். ஐந்து நிமிடம் அமைதியாக இருந்த ரஜினி, அந்த டேபிளில் கேக் வெட்டுவதற்காக அனைவரும் தயாரான போது, தனது டேபிளில் இருந்து எழுந்து போய், அவர்களை வாழ்த்தி, அவரை கட்டி பிடித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
ஒவ்வொரு முறையும் கேமராவுக்கு வெளியே தன்னை ஒரு சாதாரண மனிதனாக ரஜினி காட்டிக் கொள்கிறார். இதனால்தான் அவரை அனைவரும் Extraordinary ஆக பார்க்கிறார்கள்" எனத் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.