சினிமா படப்பிடிப்புகளை தொடங்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. மேலும் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமாத்துறைச் சார்ந்த வியாபாரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில், சமூக இடைவெளியை கடைபிடித்து, சினிமா தியேட்டர்கள் மற்றும் படப்பிடிப்புகள் தொடங்கி இருக்கின்றன.
இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகளை தொடங்க, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ''குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு படப்பிடிப்புகளை நடத்த வேண்டும்., கேமரா முன் நடிப்பவர்களை தவிர்த்து அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், படப்பிடிப்பு தளத்தில் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது, 6 அடி தனி மனித இடைவேளியை பின்பற்ற வேண்டும், படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்கள், ரசிகர்களை அனுமதிக்க கூடாது, ஒப்பனை கலைஞர்கள் அனைவரும் கட்டாயம் கவச உடை அணிந்து பணியாற்ற வேண்டும், உடைகள், விக், ஒப்பனை பொருட்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வதை முடிந்தளவுக்கு தவிர்க்க வேண்டும்'' உள்ளிட்ட பல்வேறு விதிகளுடன் சினிமா படப்பிடிப்புகளை தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது.