இன்று உலகம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதிலும் தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தாக்கம் ஒருபக்கம் ஒருக்க, ''இந்த கொரோனா வைரஸ் சூழல் மக்களிடையே ஏற்படுத்தும் மனச்சோர்வு இன்னும் பயங்கரமானது'' என சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அண்மையில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைவின் போது, சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது, இந்த Mental Depression தான். இத்தகைய மனச்சோர்வில் இருந்து நீங்க எப்போதுமே மனிதர்களுக்கு ஒரு பாசிட்டிவிட்டி தேவைப்படுகிறது. அதை ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அவளவில் வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி கலையின் மூலமாக தனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய பாசிட்டீவ் எனர்ஜியை கொடுத்து வரும் தளபதி விஜய், இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நேரத்தில் விஜய்யை வாழ்த்துவதை விட, அவர் நமக்கு கொடுத்த பாசிட்டிவிட்டியை நினைவுக்கூர்வதே சரியாக இருக்கும்.
விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர். அப்படி இருந்த போதிலும், தொடக்கத்தில் தனது தோற்றத்திற்காக விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தவர்தான் விஜய். ஆனால் அப்படி பேசியவர்கள் எல்லோரும், இப்போது விஜய்யின் 40-களில் அவரின் அழகை அள்ளி கொஞ்சுகின்றனர். பத்திரிக்கைகளில் தனது தோற்றம் விமர்சனத்துக்குள்ளக்கப்பட்ட காலம் சென்று, இவர் படங்கள் இருந்தால் சர்குலேஷன் அதிகரிக்கும் எனும் காலத்தை உருவாக்கியிருக்கிறார் விஜய். விஜய்யின் அழகு முகத்தை தாண்டி, அவர் அகத்தில் இருப்பதே அதன் காரணமாக இருக்கலாம். பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, குஷி, வசீகரா என விஜய் பக்கவாக தனது ட்ராக்கில் பயணித்து, தமிழக குடும்ங்களில் ஒரு அங்கமானார். ஃபீல் குட் படங்களில் நடிக்கும் ஒரு சாதாரண ஹீரோ என தன் மீது முத்திரை விழுந்திவிடும் நேரம் வந்தபோது, விஜய்யின் ஆக்ஷன் அவதாரத்தில் தொட்டதெல்லாம் ஹிட் அடித்தது. திருமலை, கில்லி, மதுர, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என சொல்லி அடிக்கும் கில்லியாக கோலிவுட்டில் சுழன்று கொண்டிருந்தார் விஜய்.
இதற்கு பின்னர் மீண்டும் விஜய் கேரியரில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. அடுத்தடுத்த அவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை அடைய முடியாமல் போனது. அழகிய தமிழ்மகன், வில்லு, குருவி, சுறா உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றியடையாமல் போக, மீண்டும் விமர்சனங்கள் அவரை நோக்கி பாய்ந்தன. ஒரே டெம்ப்ளேட் கதைகள், தெலுங்கு ரீமேக், 50-வது படமான சுறா ஃப்ளாப் என விஜய்யின் மீது நெகட்டிவிட்டி மழை பொழிந்து தள்ளியது. ஆனாலும், அந்த நேரத்திலும் அவருக்கான வெறித்தனமான ரசிகர்கள் அதே வெறித்தனத்துடன் காத்திருந்தனர். காவலனில் கம்பேக் கொடுத்த விஜய், துப்பாக்கியின் மூலம் ஒட்டுமொத்த நெகட்டிவிட்டியையும் தூக்கி போட்டு துவம்சம் செய்தார். இன்டலிஜன்ட்ஸ் ஆபீசராக விஜய் துப்பாக்கியில் காட்டிய சட்டிலான நடிப்பு, அவர் மீது பொழியப்பட்ட விமர்சங்களின் வாயடைத்தது. அடுத்து தலைவா படமும் பல பிரச்சனைகளை சந்தித்தே வெளியானது. சொன்ன தேதியில் படம் ரிலீஸாகமல் போனது. இப்படி ஒவ்வொருமுறை தன் ரசிகர்கள் ஏமாந்து போகும் போதும், பெரிதாக ஒரு ட்ரீக் கொடுக்கும் தளபதி, கத்தி படத்தை தீபாவளி சரவெடியாக கொடுத்தார். பாடல்கள், சண்டைக்காட்சி, வலிமையான ப்ளாஷ்பேக், அழுத்தமான க்ளைமாக்ஸ் என பக்கா கமர்ஷியல் பேக்கேஜில் வெளியான கத்தி பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் வசூலை குவித்தது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் விஜய்க்கு இருக்கும் பாக்ஸ் ஆபீசை கண்டு மிரண்டு போனது கோலிவுட்.
பிறகு மெர்சல் திரைப்படம் வந்த போதும், அரசியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டார் விஜய். அவர் படத்தில் பேசியது இந்த முறை விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது. விஜய் எனும் நடிகரை தாண்டி, அவரது கருத்துக்களின் மீதும், அதை அவர் வெளிப்படுத்துவதற்காகவும் வசைப்பாடப்பட்டார். தொடர்ந்து சர்கார் திரைப்படமும் அதே ரீதியான சர்ச்சைகளை சந்தித்தது. இந்த முறை விமர்சனங்கள் விஜய்யின் தோற்றத்தின் மீதோ, அவரின் நடிப்பின் மீதோ விழவில்லை. அவரின் கருத்துக்களுக்காக விமர்சிக்கப்பட்டார். ஆனால், இப்போது அவர் பின்னால், ரசிகன் இருக்கிறான். அண்மையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போதும் விஜய்க்கு பிரச்சனை ஏற்பட்ட போது, அங்கு கூடியது விஜய்யின் ரசிகர்கள் கூட்டமே. வேன் மீது ஏறிய போது, விஜய் பார்த்த அன்பு, அத்தனை நெகட்டிவிட்டிகளையும் உடைத்து ஏறியக்கூடியது. காரணம், விஜய்யை சுற்றி அவர் விதைத்த பாசிட்டிவிட்டி மட்டுமே இருக்கிறது. அதுவும் தனது ஆடியோ லான்ச்களில், பாசிட்டிவிட்டியை போதிக்கும் ஒரு மருத்துவராகிவிடுவார் விஜய். அழகான குட்டிகதைகள், நகைச்சுவையான பேச்சு, ஆழமான கருத்துக்கள் என விஜய், ஒரு தலைச்சிறந்த மோட்டிவேஷன் பேச்சாளர்.
ஸ்டெர்லைட் போராட்டம், அனிதா மரணம் என விஜய் ஒவ்வொரு முறையும், உடைந்து போனவர்களின் பக்கம் ஆறுதலாக நின்றார். அந்த நேரத்தில் அவர்களுக்கு தேவைப்பட்ட அன்பை கொடுத்தார். அதே அன்புதான், விஜய்க்கு ஒரு பிரச்சனை என்று வந்தால், அதரவாக நிற்கிறது. இந்த 28 வருட விஜய்யின் சினிமா வாழ்க்கையும் ஒரு குட்டி ஸ்டோரிதான். இந்த ஸ்டோரியில் அவர் பல வெற்றிகளை, தோல்விகளை, விமர்சனங்களை, எதிர்ப்புகளை, ஏமாற்றங்களை சந்தித்து இருக்கிறார். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி, தனது வாழ்விலும் தனது படத்திலும் நம் எல்லோருக்கும் தேவையான பாசிட்டிவிட்டியை கொடுத்திருக்கிறார் விஜய். தன் மீது, தனது படங்களின் மீது, தனது கருத்தக்களின் மீது, தனது சிந்தனையின் மீதும் எத்தனையோ கற்கள் வீசப்பட்டும், விஜய் நதி போல ஓடி கொண்டிருக்கிறார். அதே போல நாமும், இந்த கொரோனா வைரஸ் ஆகட்டும், இனி வேறு பிரச்சனைகள் வரட்டும், தளபதி சொல்லியபடி, ''பலவித ப்ராப்ளம்ஸ் Will, Come and Go, கொஞ்சம் சில் பண்ணு மாப்பி'' என நதி போல ஓடி கொண்டிருப்போம், அளவில்லா அன்போடும், பாசிட்டிவிட்டியோடும்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் டாக்டர் விஜய்.