இந்த நாள்.. பத்து வருஷத்துக்கு முன் யுவன் சம்பவம் செஞ்ச நாள்..! அதுவும் தரமான சம்பவம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்களை பார்த்திருக்கிறோம். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி, இளம் இசையமைப்பாளர்கள் அனிருத், சந்தோஷ் நாராயாணன் வரை பலர் தங்கள் இசையால் மக்களை சந்தோஷப்படுத்தி கொண்டே தான் இருக்கிறார்கள். அப்படியான இசையமைப்பாளர்களில் மிகுந்த தனித்துவத்தோடு, தனக்கென மாஸ் ரசிகர்களை கொண்ட ஒரு இசையமைப்பாளர்தான் யுவன்ஷங்கர் ராஜா. 

யுவன்ஷங்கர் ராஜாவை பற்றி அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, அவரது பாட்டை கேட்கும் ஒவ்வொருவருமே சிலாகித்து பேசுவார்கள். அப்படியான மேஜிக்கை தன் இசையால் நிகழ்த்துபவர் அவர். அப்படி அவர் செய்த மேஜிக்கில் மிக முக்கியமானது கார்த்தி நடித்த பையா. யுவன் இசைக்காகவே கொண்டாடப்பட்ட பையா திரைப்படம் இன்றோடு வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிறது. பத்து ஆண்டுகள் கழித்தும் பையா பாடல்களை கொண்டாடும் அளவுக்கு என்ன நடந்தது..? வாருங்கள் பார்ப்போம். 

முதலில் லிங்குசாமி - யுவன் கூட்டணி என்பதே புதிதாக இருந்தது. அதில் கார்த்தியும் இணைந்த போது எதிர்ப்பார்ப்பு எகிறியது. ஏற்கனவே கார்த்தியுடன் பருத்திவீரனில் பணிபுரிந்துவிட்டார் யுவன். ஆனால் இந்த முறை பருத்திவீரனுக்கு நேர்மாறாக, கார்த்தியின் மாடர்ன் காஸ்ட்யுமுக்கு ஏற்ப இசையை கொடுத்தார் யுவன். அனைத்து இசை சேனல்களிலும் துளி துளி பாடல் இல்லாத காலையே இல்லை என சொல்லலாம். அப்படி சுட்டீஸ்களுக்கெல்லாம் ஃபேவரைட் ஆனது இப்பாடல். இதை தூக்கி சாப்பிடும் அளவுக்கு யுவன் போட்ட மற்றொரு ஆட்டோ பாம்தான் என் காதல் சொல்ல நேரமில்லை. யுவன் குரலில் மயக்கும் இப்பாடல், சிங்கிள்ஸ் முதல் கமிட்டட் வரை, இன்னும் பலருக்கு ஆல்டைம் ஃபேவரைட். 

அடுத்து ஒரு ஜாலி ரைட் போலாமா. அதற்கு ஒரு பூங்காற்றே. போகும் வழியில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம். இருக்கிற சுத்துதே பூமி. இப்படி பையாவின் பயணத்துக்கு தன் இசையால் அழகூட்டினார் யுவன். ஒரு முறை நா.முத்துக்குமார் சொன்னார், ''அடடா மழைடா அட மழைடா, யுவன் காட்டில் இசை மழைடா'' என்று. அப்படி கேட்கும் அனைவரது மனதிலும் எனர்ஜியை ஏற்றிவிடும் அளவுக்கு அடடா மழைடா பாடலுக்கு இசையமைத்து அசத்தினார் நம்ம லிட்டில் மேஸ்ட்ரோ. 

Last but not Least. ஏதோ ஒன்று என்னை தாக்க பாடல். யுவன் குரலிலும் நா.முத்துக்குமார் வரியிலும் இப்பாடல் நிகழ்த்திய மேஜிக், அவ்விருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். காதல் தோல்வி கண்ட ஒவ்வொருவரும் யுவனின் பாடல்கள் என்பது ஒரு வலி நிவாரணி மருந்தை போலதான். அப்படி பார்க்கையில், ஏதோ ஒன்று என்னை தாக்க பாடல்கள், அதில் தலை சிறந்த மருந்து. 10 வருடத்துக்கு முன்பு, இப்படி ஓர் மறக்க முடியாத சென்சேஷனல் ஆல்பம் கொடுத்த லிட்டில் மேஸ்ட்ரோ யுவன்ஷங்கர் ராஜா, இன்னும் இசையால் நம்மை நனையவைத்து கொண்டிருப்பார். காரணம் நா.முத்துக்குமார் சொன்னதை போல யுவன் காட்டில் இசை மழைடா..!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பத்து வருஷத்துக்கு முன் யுவன் செய்த சம்பவம் | celeberating yuvan shankar raja's music on 10 years of karthi's paiya

People looking for online information on Karthi, Paiya, Yuvan Shankar Raja will find this news story useful.