ஒரு நடிகை. அந்த நடிகையின் உருவ பொம்மை அன்று தீ வைத்து கொளுத்தப்பட்டு கொண்டிருந்தது. அவர் இச்சமூதாயத்திற்கு இழுக்கு என அபத்தங்களை அவர்மீது வீசி எறிந்தார்கள். அடுத்து அவர் நடிக்கும் படத்திற்கு எதிராகவும் திரண்டெழுந்தது ஒரு கூட்டம். இப்படியோர் உயரிய கதாபாத்திரத்தில் இவர் எப்படி நடிக்கலாம்.?! என மீண்டும் அவர்கள் தடைச்சுவற்றை எழுப்பியபடியே இருந்தனர். படத்தில் இருந்து விலகுமாறு கட்டாயப்படுத்தி பார்த்தார்கள்.
ஒருவேளை அவரின் குடும்ப பின்னணி பலமாக இருந்திருந்தால், அந்த நடிகை இப்படியான எதிர்ப்புகளை சுலபமாக கடந்திருக்கலாமோ என்னவோ..? பாவம்... அப்படியான பேக்ரவுண்ட் ஏதுமற்று, தனியே நிலைத்த பெண் அவர். இந்த எதிர்ப்புகளை எல்லாம் லெஃப்ட் ஹேன்டில் டீல் செய்து, அவர்கள் மிக உயரியதாக சொல்லிய அந்த கதாபாத்திரத்தில் நடித்து முடித்தார். படம் வெளியானது.! அந்த கதாபாத்திரத்திற்கு அவர் கொடுத்த உணர்வுப்பூர்வமான நடிப்பு, பார்த்தவர்களின் வாயடைத்தது. இந்திய சினிமாவின் ஜாம்பவானாக போற்றப்படும் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் முன், அதே திரைப்படத்திற்காக மிக உயரிய விருதான நந்தி விருதை பெறுகிறார் அந்த நடிகை.
கொஞ்சம் கொஞ்சமாக தீ வைத்த கொளுத்தப்பட்ட உருவபொம்மை, மிக பெரிய கட்-அவுட்களாக மாறுகிறது. அவர் மீது வீசி எறியப்பட்ட அபத்தங்கள் அபிஷேகங்களாக மாறுகிறது. ஒரு ஹீரோவுக்கு நிகரானவராக உயருகிறார் அந்த நடிகை. இப்போது லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்திற்கு அவர் அசைக்கமுடியாத தேர்வாக, கத்தி கத்தி பார்த்த ஹேட்டர்ஸ்களும் சோர்வாக, தனி ராஜ்ஜியம் நடத்தி கொண்டிருக்கும் அந்த நடிகைதான் நம்ம நயன்தாரா. அவரின் பிறந்தநாளான இன்று, அவர் கடந்து வந்த பாதை - ஒரு பார்வை.
சாதாரண குடும்பம்தான். பெரிய திரைப் பின்புலமும் கூட இருந்திருக்கவில்லை. ஆர்வம் மட்டுமே கொண்டு ஆங்கரிங், டிவி ஷோ என பயணித்தவர் மெல்ல கேரள சினிமாவில் அறிமுகமானார். சில படங்கள் வெற்றி அடைந்தன. சில படங்கள் சுமாராக சென்றன. இந்த கேரளத்து ப்யூட்டியை கண்டுபிடித்த இயக்குநர் ஹரி, அவரை ‘ஐயா’ படத்தில் அறிமுகப்படுத்த, ‘ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம்’ என ஒரே பாட்டில், தமிழகத்தின் கிராமங்களிலும் ரீச் ஆனார் நயன்தாரா. அடுத்தது சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் ‘சந்திரமுகி’யில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே நயன்தாராவின் ஸ்டார் வேல்யூ எகிற ஆரம்பித்துவிட்டது.
அதற்கடுத்த காலங்களில் ‘கஜினி’, ’கள்வனின் காதலி’, ‘ஈ’, ‘தலைமகன்’, ’வல்லவன்’ என நயன்தாரா தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக மாறினார். இதற்கிடையில் சிம்புவுக்கும் அவருக்கும் இடையே இருந்த விஷயங்கள் விமர்சனத்திற்குள்ளானது. இந்த விமர்சனங்கள் எல்லாம் அவர் நடித்த ‘பில்லா’வில் தவிடு பொடியானது. ‘பில்லா’ திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக நயன் காட்டிய ஸ்டைலும் லுக்கும் ஆல்-டைம் ஃபேவரைட் அடித்து, அவரது ரேன்ஜை டாப் கியரில் ஏற்றியது. அதற்கடுத்த வருடமே ஐடி கம்பெனி டீம் லீடரை ‘யாரடி நீ மோகினி’யில் நம் கண் முன்னே நிறுத்தினார் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைவருடனும் வரிசைக்கட்டி வெரைட்டி கொட்டி கொண்டிருந்தார் இவர். இப்படி ஜெட் ஸ்பீடில் சென்று கொண்டிருந்தவரின் வாழ்வில் பிரபுதேவாவுடனான காதல், அதை தொடர்ந்து எழுந்த பிரச்சனைகள், ‘ஶ்ரீ ராமராஜ்ஜியம்’ படத்தில் நடிக்க எழுந்த எதிர்ப்பு என சூறாவளி சுழன்றடிக்க, இனி நயன்தாரா அவ்வளவுதான், அவரால் மீண்டும் நம்பர் 1-க்கு வர முடியாது, உடல் எடை குறைத்ததில் இருந்து அவரது அழகு குறைந்துவிட்டது, பல இளம் நடிகைகள் அவரது இடத்தை பிடித்துவிட்டார்கள் என கொக்கரித்தது எதிர்த்திருந்தவர்களின் கூட்டம்.
நான் எங்கேயும் போகல, இங்கதான் இருக்கேன் என ‘ராஜாராணி’யில் ரசிகர்களுக்கும் ஹேட்டர்ஸ்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்தார். ரெஜினா என்ற கதாபாத்திரத்தில் இருந்த பல உணர்ச்சி படிமங்களை நேர்த்தியாக கையாண்டு கைத்தட்டல்களையும் விருதுகளையும் குவித்தார். மீண்டும் நயன்தாரா பிசியாக வலம் வர தொடங்கினார். 2013-ல் நயன்தாரா நடிப்பில் வெளியான அனாமிகா, அவரது சினிமா கெரியரில் மிக முக்கியமாக படமாக அமைந்தது. ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கஹானி திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த படம். படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாமல் போயிருப்பினும், இங்கிருந்துதான் நயன்தாராவின் சோலோ ஹீரோயின் இன்னிங்ஸ் ஆரம்பமானது. அதுவே இப்போது பல ஹீரோயின்களுக்கு ட்ரெண்ட் செட்டராக அமைந்திருக்கிறது.
தனி ஒரு நடிகையாக, ஒரு படத்தை முழுமையாக தனது ஸ்க்ரீன் பிரசன்ஸை மட்டுமே வைத்து கொண்டு, அதில் வெற்றியும் பெற முடியும் என நயன்தாராவின் ‘மாயா’, ‘அறம்’, ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட திரைப்படங்கள் நிருபித்து காட்டின. இதுஒருபுறம் இருக்க, கதாநாயகியாகவும் தனி ஒருவன், நானும் ரவுடிதான், இருமுகன் என ஹோம் கிரவுண்டில் சிக்சர் விளாசி தள்ளினார். இப்போது மூக்குத்தி அம்மனில் ஒட்டுமொத்த தமிழக குடும்பத்தின் வீடுகளிலும் நிறைந்து அருள்பாலித்து கொண்டிருக்கிறார் நமது லேடி சூப்பர்ஸ்டார்.
சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் அவ்வளவு சுலபமாக கிடைத்துவிடாது. நமது ரசிகர்கள் அத்தனை எளிதில், சூப்பர்ஸ்டார் கிரீடத்தை ஒருவரின் தலையில் ஏற்றி வைத்துவிட மாட்டார்கள். அதை வெறும் வெற்றிகள் மட்டுமே கொடுத்துவிடாது. எத்தனையோ தோல்விகள், ஏமாற்றங்கள், வலிகள் எல்லாம் கண்ட பிறகும், மீண்டும் மீண்டும் திரும்பி வந்து தனக்கான பென்ச்மார்க்குகளை உடைப்பவர்களே, எப்போதும் சூப்பர்ஸ்டார்களாக இருந்து வந்துள்ளார்கள். அப்படியான சூப்பர்ஸ்டார்தான் நயன்தாரா என்பது காலம் சொல்லும் உண்மை.
''நீங்க செய்யுற விஷயம் சிலருக்கும் பிடிக்கும், சிலருக்கு பிடிக்காமல் போகும். அதை பற்றி எல்லாம் சிந்திக்காமல், நமக்கு உண்மையா இருந்துட்டா போதும்..'' - இதுதான் நயன்தாரா. இதுதான் அவரை இன்றும் என்றும் ரசிகர்களின் மத்தியில் லேடி ‘சூப்பர்ஸ்டார்’ சிம்மாசனம் போட்டு அமர வைத்திருக்கிறது. அப்படியான சாதனையாளருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவதில் மகிழ்ச்சி கொள்வோம்.!
பிறந்தநாள் வாழ்த்துக்கள், நயன்தாரா!