தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ஜெயம் ரவி. ஜெயம் முதல் கோமாளி வரை, இவரின் படங்கள் என்றால், கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பார்த்து, ரசித்து வரலாம். இதுதான் அநேக தமிழ் மக்களின் எண்ணம். மிகப் பெரிய எடிட்டரின் மகனாக இருந்த போதிலும், தனது அண்ணன் மோஸ்ட வாண்டட் கோலிவுட் இயக்குநர் என்ற போதிலும், இந்த 17 வருடத்தில் ஜெயம் ரவி, தனது நேர்த்தியான கதை தேர்வுகளின் வழியே, தனது திறமையான நடிப்பின் வழியே, தமிழ் ரசிகர்களை தனது சொந்தமாக்கி கொண்டுள்ளார். இந்நேரத்தில் ஜெயம் ரவி இந்த 17 வருடத் திரை வாழ்க்கையை பார்க்கலாம்.
அப்பா மோகன், தமிழ் சினிமாவின் மிக மூத்த இயக்குநர். அவரின் மகனான ரவிக்கு நடிப்பின் மீது ஆர்வம். முதல் படத்தில் அறிமுகமாகும் முன்பே முறையாக நடிப்பு பயிற்சி பெற்று, அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ரவி. இளமையான தோற்றம், சுறுசுறுப்பான நடிப்பு என முதல் படத்திலேயே தன்னை கவனிக்க வைத்தார் இவர். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காதல் படங்களில் ஜெயம் படத்திற்கு தனி இடமுண்டு. முதல் படத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்த ஜெயம் ரவி, அடுத்து எம்.குமரன் திரைப்படத்தின் ஒரு பக்கா ஹீரோவாக ஜொலித்தார். நடனம், காமெடி, ஆக்ஷன் என ஆல் ஏரியாவிலும் புகுந்து விளையாடினார். குறிப்பாக ஜெயம் ரவி - நதியா இடையிலான அம்மா - மகன் காட்சிகள், ஒவ்வொரு அன்னையர் தினத்திலும் தவறாமல் இடம்பெற்றுவிடும் அளவுக்கு ஃபேமஸ். அதற்கு அப்படியே எதிராக, பிரகாஷ் ராஜுடன் ஜெயம் ரவி காட்டிய ஆக்கிரோஷமான நடிப்பு ரசிகர்களை கவர, தமிழ் சினிமாவின் இளம் புயலாக சுழலத் தொடங்கினார் ரவி.
தொடர்ந்து தாஸ், மழை, இதயத்திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி என ஜெயம் ரவி நடித்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, கமர்ஷியலாகவும் நல்ல வெற்றியை அடைந்தன. இதையடுத்து சம்மருக்கு வெளியான சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெயம் ரவி கரியரில் சூப்பர் ஹிட் அடித்தது. அப்பாவின் அதீத அன்பினால் கட்டுப்பாடுகளுக்குள் சிக்குண்டு தவிக்கும் இளைஞனாக ஜெயம் ரவி காட்டிய நடிப்பு, ரசிகர்களிடன் அமோக வரவேற்பை பெற, குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு படையெடுத்தனர் மக்கள். ஜெயம் ரவியை எல்லோர் வீட்டிலும் கொண்டு சேர்த்ததில், அவரது அண்ணன் மோகன் ராஜா அவரை வைத்து இயக்கிய படங்களுக்கு பெரிய பங்குண்டு. மென்மையான கதாபாத்திரங்களை மட்டும் செய்து கொண்டிருந்த ஜெயம் ரவி, தாம் தூம், பேராண்மை உள்ளிட்ட படங்களின் மூலம் ஆக்ஷன் அவதாரமும் எடுத்தார். குறிப்பாக பேராண்மை திரைப்படத்தில் தனது துருவன் கதாபாத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டிருந்தார் ரவி.
இதையடுத்து தில்லாலங்கடி, எங்கேயும் காதல் என அழகான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த ஜெயம் ரவியின் மற்றுமொரு முக்கியமான திரைப்படம் அமீரின் ஆதிபகவன். மாஃபியா டானாக ஒரு பக்கம், பெண்தன்மை கொண்ட கேங்ஸ்டராக இன்னொரு பக்கம் என ஜெயம் ரவியின் நடிப்புக்கு செம தீனீயாக அமைந்தது ஆதிபகவன். மேலும் சமுத்திரக்கனியுடன் நிமிர்ந்து நில், பக்கா காதல் ரைடாக ரோமியோ ஜூலியட், ஃபுல் டைம் காமெடியில் சகலகலா வல்லவன் ஆகிய படங்களில் நடித்த ஜெயம் ரவிக்கு, 2015-ஆம் ஆண்டு முக்கியமான வருடம்.
ஜெயம் ரவி நடித்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தனி ஒருவன் மற்றும் பெரும் பாராட்டை பெற்ற பூலோகம் இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டில்தான் வெளியாகின. தனி ஒருவன் திரைப்படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் உச்சி முகர்ந்து கொண்டாடினார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்தது. மேலும் ஒரு ஹீரோயிக் கதையில் வில்லன் கதாபாத்திரத்திற்கு அதீத அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டும், தனது மித்ரன் கதாபாத்திரத்தை மிடுக்கோடு செய்து லைக்ஸை அள்ளினார் ஜெயம் ரவி. அடுத்து பூலோகத்தில் வடசென்னை பாக்ஸராக வெரைட்டி காட்டுவதெல்லாம் ஜெயம் ரவியின் பக்கா மேஜிக். தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சிகளான மிருதன், டிக் டிக் டிக் என தனது திரைப்படங்களின் வழியே தன்னை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஜெயம் ரவி தவறுவதில்லை.
அண்மையில் அறிமுக இயக்குநர் ப்ரதீப் இயக்கத்தில் இவர் நடித்த கோமாளி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. நினைவுகள் தவறிய 90-ஸ் இளைஞனாக ஒட்டுமொத்த 90-ஸ் கிட்ஸ்களுக்கு செம ட்ரீட் கொடுத்தார் ஜெயம் ரவி. அடுத்து பூமி, பொன்னியின் செல்வன் என தனது ட்ராக்கை பக்காவாக செட் செய்து பயணித்து கொண்டிருக்கிறார் இந்த இளம்புயல். இந்த 17 வருட திரை வாழ்க்கையில் மிகவும் செலக்ட் செய்தே ஜெயம் ரவி தனது படங்களை நடித்துள்ளார். அது அவர் நடித்த மொத்த படங்களை எண்ணிப் பார்த்தாலே புரிந்துவிடும்.
தனது கமர்ஷியல் அம்சத்தை தாண்டி, மார்கெட்டை தாண்டி, ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதுமையான ஒரு விஷயத்தை கொடுப்பதில் ஜெயம் ரவி எப்போதுமே தனி முனைப்பை காட்டி வருகிறார். அதனால்தான் அவர் தமிழ் சினிமாவின் தனி ஒருவனாக வலம் வருகிறார். ஜெயம் ரவியால் தரமான ஃபீல் குட் படங்களான உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், எங்கேயும் காதல் போன்ற படங்களையும் செய்ய முடியும், தாம் தூம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற Intense-ஆன ஆக்ஷன் படங்களையும் செய்ய முடியும். புதுமுக இயக்குநர்களை நம்பி இறங்குவது, புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது என தனது சினிமா வாழ்க்கையில், புதுமையை மட்டுமே தேடும் வெறி பிடித்த கலைஞன் ஜெயம் ரவி. அந்தப் புதுமையை அவர் தொடர்ந்து அடைந்து கொண்டே இருப்பார், காரணம் அவரே சொல்லியிருக்கிறார், ''தனி ஒருவன் நினைத்துவிட்டால், இந்த உலகத்தில் தடையுமில்லை'' என்று.
17 வருடத்தில், தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பதித்து, தனது ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெரைட்டி காட்டி வெளுத்துக்கட்டி கொண்டிருக்கும், ஜெயம் ரவிக்கு இன்னும் சிகரங்களை தொட நிறைவான வாழ்த்துக்கள்.