கலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை மட்டுமல்லாது தற்போது தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் தனது பாடலால் கவர்ந்துள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹிதாவின் பூர்விகம் கர்நாடகா. டீன் ஏஜில் இருக்கும் ஹிதாவின் குரலுக்கு கலிபோர்னியாவில் ஏராளமான ரசிகர்கள் அடிமை எனலாம். இவரது பாடல்கள்சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், மீடியா ஒர்க்ஸ் யோகேந்திரன் ஹிதாவை அணுகி சென்னையில் பாப் இசை நிகழ்ச்சி நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனை ஏற்று, கடந்த ஆக.3ம் தேதி சென்னையில் மகேந்திரா சிட்டி பின்னால் உள்ள மகரிஷி ஸ்கூல் கிரவுண்டில் தனது நிகழ்ச்சியை “INSPIRED BY HITHA “ என்ற பெயரில் நடத்தினார். இந்தியாவிற்கு அறிமுகமில்லாத இவரை ரசிகர்கள் எப்படி ஏற்கப்போகிறார்கள், நுழைவு கட்டணம் கட்டி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்குமா என்ற அச்சம் நிலவியது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது, ஹிதாவை மட்டுமின்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஹிதா பாட ஆரம்பித்த முதல் பாடல் முதல் கடைசி பாடல் வரை ரசிகர்கள் அவருக்கு உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர்.
இசை நிகழ்ச்சியின் இறுதியில் சுமார் 10 நிமிடங்களுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டினர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான இசையமைப்பாளரின் இசையில் பாட வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.