"என் முதல் படத்தில் நீங்கள்.. உங்கள் கடைசி படத்தில் நான்".. KV ஆனந்த் குறித்து சூர்யா உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேருக்கு நேர், பாய்ஸ், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி.ஆனந்த், இயக்குநரான பிறகு சூர்யாவை வைத்து அயன், மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில் அவர் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்ததை அடுத்து சென்னையில் அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு, நடிகர் சூர்யா உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், “கே.வி.ஆனந்த் சார்.. இது 'பேரிடர் காலம்' என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது.

நீங்கள் இல்லை என்கிற உண்மை, மனமெங்கும் அதிர்வையும் வலியையும் உண்டாக்குகிறது. ஏற்கமுடியாத உங்கள் இறப்பின் துயரத்தில் மறக்க முடியாத நினைவுகள் அலை அலையாக உயிர்த்தெழுகின்றன.

நீங்கள் எடுத்த புகைப்படங்களில் தான், ‘சரவணன் சூர்யாவாக’ மாறிய அந்த அற்புத தருணம் நிகழ்ந்தது. முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவனை சரியான கோணத்தில் படம் பிடித்து விட வேண்டும் என, இரண்டு மணி நேரம் நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் வியந்து பார்க்கிறேன். ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ அலுவலகத்தில் அந்த இரண்டு மணி நேரம் ஒரு போர்களத்தில் நிற்பதைப் போலவே உணர்ந்தேன்.

‘நேருக்குநேர்’ திரைப்படத்திற்காக நீங்கள் என்னை எடுத்த, அந்த ‘ரஷ்யன் ஆங்கிள்’ புகைப்படம் தான், இயக்குனர் திரு.வசந்த், தயாரிப்பாளர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட அனைவருக்கும் என் மீது நம்பிக்கை வர முக்கிய காரணம். புகைப்படத்தை விட 10 ஆயிரம் மடங்கு பெரியதாக முகம் தோன்றும் வெள்ளித்திரையிலும் நடிகனாக என்னை படம் பிடித்ததும் நீங்கள்தான்.

முதன் முதல் என் மீது பட்ட வெளிச்சம் உங்கள் கேமராவில் இருந்து வெளிப்பட்டது .அதன் மூலம் தான் என் எதிர்காலம் பிரகாசமானது. என்னுடைய திரையுலக பயணத்தில் உங்களின் பங்களிப்பும் வழிகாட்டலும் மறக்கமுடியாதது. ‘வளர்ச்சிக்கு நீ இதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்’ என அன்புடன் அக்கறையுடன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என்னை வழிநடத்துகின்றன.

இயக்குனராக அயன் திரைப்படத்திற்கு நீங்கள் உழைத்த உழைப்பு ஒரு மாபெரும் வெற்றிக்காக காத்திருந்த எனக்குள் புதிய உத்வேகத்தை அளித்தது. அயன் திரைப்படத்தின் வெற்றி  ‘அனைவருக்கும் பிடித்த நட்சத்திரமாக என்னை உயர்த்தியது’ என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

எனது முதல் திரைப்படத்தில் நீங்களும் உங்களின் கடைசி திரைப்படத்தில் நானும் பணியாற்றியது இயற்கை செய்த முரண்... எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார். இதயபூர்வமான நன்றி அஞ்சலி.., நினைவுகளுடன் சூர்யா!” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: KV ஆனந்தின் மாரடைப்புக்கான காரணம் இதுவா? விளக்கும் பிரபல மருத்துவர்.. விழிப்புணர்வு பேட்டி!

தொடர்புடைய இணைப்புகள்

Breaking Surya emotional note after KV Anand demise

People looking for online information on K.V.Anand, KV Anand, Mani Ratnam, Mani Ratnam - Madras Talkies, Suriya, Vijay will find this news story useful.