பிரபல தமிழ் பாடகர் பம்பா பாக்யா (எ) பாக்யராஜ் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம், பலரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 49.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ராவணன் திரைப்படத்தில் இருந்தே பாடிவந்த பாடகர் பம்பா பாக்யா, சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘சிம்டாங்காரன்’ பாடலை பாடியதன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனார். இதன் பின்னர், ரஹ்மான் இசையில் எந்திரன் 2.0 படத்தில் வரும் புள்ளினங்காள் பாடல், சர்வம் தாள மயம் படத்தில் வரும் பாடல்கள் என பல பாடல்களை பாடினார்.
தமிழில் குறிப்பிடத்தகுந்த பாடகராக மாறிய பாக்யா, 'பிகில்' படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வரும் 'காலமே காலமே' பாடலை மிகவும் உருக்கமாக பாடியிருப்பார். அதே போல, சந்தோஷ் தயாநிதி இசையில் பம்பா பாக்யா பாடிய ‘ராட்டி’ ஆல்பம் பாடல் இளைஞர்களை கவர்ந்தது.
சமீபத்தில் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து வெளியான ‘பொன்னி நதி’ பாடலின் ஆரம்ப வரிகளை பம்பா பாக்யாதான் பாடி இருப்பார். இது தவிர இன்னொரு பாடலையும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பம்பா பாக்யா பாடி உள்ளார். அவருடைய இறப்பு குறித்த தகவலை ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் பாடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று இரவு 12.30 மணிஅளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய இந்த திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.