நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை 4-கட்ட படப்பிடிப்புகள் முடிந்தநிலையில் பீஸ்ட் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கான வேலைகள் துவங்கி உள்ளன. பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இரவு நேரத்தில் நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு டில்டா ரிக்கை பயன்படுத்துவதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் சிறப்பாக இருப்பதாகவும்,பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ரெட் நிறுவனத்தின் புதிய வரவான RED RAPTOR வகை கேமராவை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்துவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார். இந்த ரெட் ராப்டர் வகை கேமராவின் சிறப்பம்சமாக Slow Motion வீடியோக்களை துல்லியமாக 8K Resolution கொண்டு எடுக்கலாம்.
தமிழ் சினிமாவில் இதற்கு முன் அஜித் நடித்த பில்லா-2 (2012) படத்திற்கு RED EPIC கேமரா இந்தியாவிலேயே முதன் முறையாக ஒளிப்பதிவாளர் R D ராஜசேகர் ISC அவர்களால் பயன்படுத்தப்பட்டது. பின் சூர்யா நடித்த அஞ்சான் (2014) படத்திற்கு RED Dragon கேமரா உலகிலேயே முதன் முறையாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ISC அவர்களால் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.