தல அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் பற்றிய அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.
இந்நிலையில், அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தலா 60’ திரைப்படத்தின் அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவரது ட்வீட்டில், ‘நேர்கொண்ட பார்வை படத்தை ஆக.8ம் தேதி ரிலீஸ் செய்ய பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. தற்போது AK60 திரைப்படத்தை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அஜித் குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் பூஜை ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார்.
இப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று ஏற்கனவே Behindwoods தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.