சினிமா விமர்சனங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் Blue சட்டை மாறன்.

இவரின் பாமரத்தனமான விமர்சனங்கள் சினிமா சம்பந்தபட்டவர்களை கோபமடைய வைத்தாலும், ரசிகர்களின் ஆதரவு கனிசமாக இவருக்கு உண்டு. இந்த ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள திரைப்படம் ஆன்டி இண்டியன். இது இவருக்கு முதல் திரைப்படமாகும். ஆதம் பாவா இந்த படத்தை Moon பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார்.
சென்சார் போர்டால் தடைவிதிக்கப்பட்டு, பிறகு பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் போஸ்டர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் ‘ஆடுகளம்’ நரேன், ‘வழக்கு எண்’ முத்துராமன், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தை டிசம்பரில் வெளியிடுவதாக படக்குழு முன்னர் அறிவித்தது. ஆனால் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதும் இந்த படம் மத அரசியல் பற்றிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக ப்ளூ சட்டை மாறன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், டிசம்பர் 3 ஆம் தேதி நமது படமான 'ஆன்டி இண்டியன்' ரிலீஸ் என்று தெரிவித்து இருந்தோம். தற்போது அதில் ஒரு மாற்றம். டிசம்பர் முதல் வாரத்திலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளது. மூன்றாம் தேதியன்று பிரபல நடிகர்களின் படங்களும் வெளியாகிறது. ஆகவே அக்குறிப்பட்ட நாளில் போதுமான திரையரங்குகள் கிடைப்பது கடினம் என்பதால், ஒரு வாரம் தள்ளி 10 ஆம்தேதி வருவதென முடிவு செய்துள்ளோம். நீண்ட நாட்கள் காத்திருந்து விட்டோம். மேலும் ஒரு வாரம் தாமதமானால் தவறில்லை என்பதாலும், இத்திரைப்படம் தமிழகத்தில் போதுமான அரங்குகளில் வெளியானால் பலரையும் சென்றடையும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.