நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த அனுமதி அளித்த கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு உயர் கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்.19ம் தேதி தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் லைவாக பாடல் பாடி, தனது ரசிகர்களுக்கு குட்டி கதை கூறிய நடிகர் விஜய், சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனரால் ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார். அது பற்றி பேசிய விஜய், அரசின் செயல்பாடு விமர்சித்திருந்தார்.
விஜய்யின் கருத்துக்கு தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கிய கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் தாம்பரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது என தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனிடையே, கல்லூரி நிர்வாகம் தரப்பில், பிகில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற ஆடிட்டோரியம் கல்லூரிக்கு தொடர்பில்லாத இடத்தில் இருப்பதாகவும், பல நிகழ்ச்சிகள் அங்கு ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.