விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது வரவிருக்கிறது.
இதுவரை விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மிகவும் டாப் டண்டிங் ஆன நிகழ்ச்சி பிக் பாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களாக நிறைவு பெற்றிருக்கிறது. நடிகர் மற்றும் பத்மஸ்ரீ கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களிலும் பல்வேறுவிதமான அனுபவங்கள் பார்வையாளர்களுக்கும், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும், போட்டியில் வென்றவர்களுக்கும் கிடைத்தது என்பது மறுக்க முடியாதது.
‘அகம் டிவி வழியே’ என்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் முறையை காண்பதற்காகவே பலரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக மாறினர். வாழ்க்கையை நுட்பமாகவும், அதேசமயத்தில் மனதில் பட்ட இயல்புகளுடன் நடந்துகொள்வதும், மனிதர்களை அணுகுவதும் என பலவிதமான படிப்பினைகளை கற்றுத்தரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஒரு மணி மகுடம் என்றே சொல்லலாம்.
அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் வரவிருப்பதாக கமல்ஹாசன் பேசும் டீசர் ஒன்று அண்மையில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
இதில் ஒரு கல்யாண வீட்டில் சந்தோஷமாக கலகலவென பேசத் தொடங்கும் இரு குடும்பத்தாரும் கொஞ்சம் கொஞ்சமாக அரசல்புரசலாக புரணி பேசி, ஒருவரை ஒருவர் குறை சொல்லி, கோபப்பட்டு, வெறுப்புணர்வை காட்டி, பொறாமையும் வஞ்சகமும் கொண்டு சண்டை போட்டுக் கொள்ளும் வரை இந்த புரோமோவில் காட்சிகள் இடம்பெறுகின்றன.
இந்த வீட்டில் ஒரு அங்கமாக வரும் கமல்ஹாசன் இவர்களை வைத்து இறுதியில் ஒரு மெசேஜ் சொல்வதாய் இந்த ப்ரோமோ முடிகிறது. இணைய பிரபலங்கள் பலரும் இந்த குழுவில் நடித்திருக்கின்றனர்.
விரைவில் வெளியாகவிருக்கும் பிக்பாஸ் 5வது சீசன் நிகழ்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்பதை காணும் ஆர்வத்தில் இப்போதே ரசிகர்கள் துடிப்பாய் இருக்கின்றனர்.