பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு அன்று தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், முதல் நாளன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை, இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்த போட்டியாளர்களில் ஒருவர்தான் பவானி ரெட்டி. சின்னத்தம்பி, ரெட்டைவால் குருவி உள்ளிட்ட சீரியல்கள் நடித்த பவானி ரெட்டி இந்த போட்டியில் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். பல்வேறு உருக்கமான தகவல்களை கூறியிருக்கிறார். அதன்படி தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டு, இறந்து விட்டதாக பவானி ரெட்டி உருக்கமாக பேசியிருக்கிறார். பல ரசிகர்களும் அவருடைய கதையை கேட்டு சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் இது குறித்து பேசிய பவானி ரெட்டி, “எனக்குள் கோபமும் இருக்கிறது. குறும்பும் இருக்கிறது. நான் என்னை வெளிப்படுத்துவேன். இது தான் நான்” என்று குறிப்பிட்டதற்கு, கமல்ஹாசன், “அதுதான் இந்த வீடு.. இந்த வீட்டில் நீங்கள் நீங்களாக இருப்பது தான் முக்கியம்!” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பேசிய பவானி ரெட்டி, “எனக்கு 23 வயது ஆனதில் இருந்து திருமணம் செய்தால், கணவர் வேலைக்கு போய்விடுவார். நாம் வீட்டில் இருந்து குழந்தையை பார்த்துக் கொள்ளலாம், நாம் சுதந்திரமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்.
ஆனால் இந்த திட்டங்களை எல்லாம் அடியோடு புரட்டிப் போடும் வகையில் எதிர்பாராத சம்பவமாக என் கணவர் தற்கொலை செய்துகொண்டார். அதற்காக நான் பழிக்கப்பட்டேன். இந்த வலியுடனும் இழப்புகளுடனும் இப்போது வரைக்கும் என்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு பிறகு என்ன வந்தாலும் பரவாயில்லை. இந்த வாழ்க்கைக்கு பிறகும் இன்னொரு திருமண வாழ்க்கைக்கு செல்லும் அளவுக்கு எனக்கு அதிர்ஷ்டம் இல்லை” என்று பேசும் பவானி ரெட்டி தன்னுடைய கணவரின் குடும்பம் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் தான் துணிச்சலான பெண் என்றும், அதேசமயம் தனக்கும் கோபம் வரும் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இவற்றையெல்லாம் பிக்பாஸ் வீட்டில் வெளிப்படுத்த போவதாகவும் தெரிவித்திருக்கிறார் பவானி ரெட்டி. பவானி ரெட்டியின் இந்த இயல்பான எமோஷனை கேட்டும், அவருடைய கதையை கேட்டும், ரசிகர்கள், ‘இப்படி ஒரு நிலைமை யாருக்குமே வரக்கூடாதுப்பா’ என சோகமாக பேசி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வோ, முடிவோ அல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வது நமக்கும் நம் சார்ந்தவர்க்கும் பேரிழப்பு. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.