பிக்பாஸ் 5வது சீசனின் கதை சொல்லும் டாஸ்கில் தன் வாழ்க்கை போராட்டம் குறித்து நமீதா பேசியுள்ளார்.
அதில் அவர், “10 வயதுக்கு மேல் இது போன்ற உணர்வுகள் வந்ததும் பயந்துவிட்டேன். எங்கு போவதென்று தெரியவில்லை. பெற்றோருக்கு இது தெரிந்ததும் தொடர்ந்து என்னை கட்டுப்படுத்தினார்கள். அங்கிருந்து விட்டு பாம்பேவுக்கு சென்றேன். ஆனால் அங்கு நடந்ததைப் பார்த்து, அதாவது பாம்பேவில் என் போன்றவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை பார்த்து, என் வாழ்க்கைமுறையும் அங்கிருப்பவர்களை போலாகிவிடும் என்று பயந்து சென்னைக்கு திரும்பி வந்து விட்டேன். சென்னையில் ஒரு தோழியைப் பார்க்க சென்றேன் அங்கு தோழி மற்றும் பெற்றோர் இணைந்து என்னை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டனர்.
அப்படி என்னை ஆம்னி வேனில் அடித்து அழைத்து சென்று இருட்டு அறையில் அடைத்து வைத்தனர். அங்கிருந்த ஒருவர், என் மீது கொண்ட அக்கறையால் இங்கிருந்து போய்விடு என்று எச்சரித்தார். அந்த மாத்திரைகளை சாப்பிட்டால் அங்கிருந்து வெளியே போகவே கூடாது என்று தோன்றும் எனவும் கூறியிருந்தார்.
இதனால் அங்கிருந்து தப்பித்தேன். பிறகு என்னுடைய தோழி என்னுடைய பெற்றோரை கொண்டு வந்து, என்னை பிடித்து விட்டார்கள். மீண்டும் அந்த மருத்துவமனை என்னை சேர்த்துக் கொள்ள மறுத்தது. இதனையடுத்து கோர்ட்டில் என்னை கொண்டு சென்று நிறுத்துவதற்கு ஒரு இன்ஸ்பெக்டர் உதவினார். அங்கு நான் போடுவது வெளிவேஷம்தான் உண்மையில் நான் இதுதான் என்று உடைத்து கூறினேன்.
அப்போது என்னை ஹோமில் வைத்து கண்காணிக்கச் சொல்லி நீதிபதி கூற, அங்கிருந்த ஒருவர் ஆம்பளை ஹோம்லயா.. பொம்பளை ஹோம்லயா என்று கேட்டார். பிறகு யோசித்து நீதிபதி சாப்பிட்டு வந்து தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பின் படி 18 வயது ஆகிவிட்ட நான் என் வாழ்க்கையில் சுயமாக வாழலாம் என்று கூறினார். நான் அத்தனை வருடம் போராடியதற்கு விடை கிடைத்தது. விடுதலை கிடைத்தது. மேலும் என் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் தாய் தந்தையர் தான் காரணம் என்று கூறியிருந்தேன். அதன்பிறகு பக்கத்து தெருவில் வீடு எடுத்து பெற்றோர் முன்னால், வாழ்ந்து காட்டுவேன் என முடிவு எடுத்தேன்.
என் தந்தை ரோட்டோரம் நிற்கும் திருநங்கைகளிடம் சென்று பேசி, திருநங்கைகளை புரிந்து கொண்டு, அதன் மூலம் என்னைப் பற்றியும் புரிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் பேசி எனக்கு உதவி செய்தார். என் அம்மா மிக தாமதமாக என்னை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் மாடலானேன். சரத்குமார் சார் முன்னணியில் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அந்த செய்தி பேப்பரில் வந்து இருந்தததை பார்த்த என் அம்மா பெருமைப்பட்டார். இதுவரை நான் 25 படங்களில் நடித்திருக்கிறேன் யாருக்குமே தெரியாது (அழுதுகொண்டே) பெண்ணாக நடித்திருக்கிறேன். அந்த படங்களை அடுத்து வெளிநாடுகளில் எல்லாம் சென்று நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பேஷன் ஷோக்களில் கலந்து இருக்கிறேன். அவர்கள் தொடர்ந்து என்போன்ற திருநங்கைகளின் பயிற்சி அளித்து அனுப்பச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். அதற்கான மரியாதையான பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்.
நான் இந்த 100 நாளில் இதையெல்லாம் கேட்பேன். எந்த திருநங்கைகளாவது பலாத்காரம் பண்ணி பார்த்திருக்கிறீர்களா? நாங்கள் பெரியவர்களிடம் மரியாதையாக பேசுவோம். எந்த திருநங்கையும் எந்தப் பெண்ணின் வாழ்க்கையையும் கெடுத்தது இல்லை. தங்கள் வாழ்க்கையைதான் கெடுத்துக் கொள்வார்கள்.!” என அழுதபடி பேசியதுடன் இறுதியில் அந்த வலியுடன் ஒரு பாடலையும் பாடினார். அதற்கு அனைவரும் ‘லவ்’ கொடுத்தனர்.
Also Read: பிக்பாஸ்ல நொழஞ்சப்பவே விஜய் டிவி வேலை காலினு தெரியும்".. அக்ஷராவிடம் புலம்பிய பிரியங்கா!