நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு வாரமும், வார இறுதியில் போட்டியாளர்களிடையே பேசக்கூடிய நிகழ்வு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த 5வது சீசனில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வெளியேறப் போவது யார்? என்பது குறித்த பேச்சை கமல்ஹாசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சின்ன பொண்ணு வீட்டைவிட்டு வெளியேறப் போவதில்லை என்கிற தகவலை கமல் கூறினார். இதை கேட்ட உடனே சின்ன பொண்ணு எமோஷனலாக அழத்தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “சின்னப்பொண்ணுவை அறிமுகப்படுத்தும்போது ஒரு புத்தகத்தை பற்றி நான் சொல்வதாக இருந்தேன். அந்த புத்தகம் வானமாமலை எழுதிய ‘தமிழர் நாட்டுப்பாடல்கள்’ என்கிற புத்தகம். நான் ‘தேவர் மகன்’ திரைப்படத்தில், ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலில் ‘மறக்க மனங்கூடுதில்லையே’ என்கிற வரிகளை, அதாவது இந்த புத்தகத்தில் இருந்து நான் விரும்பிய அந்த வரிகளை வாலி அவர்களிடம் சொன்னபோது, அவர் அந்த வரிகளையும் சேர்த்து அந்த பாடலை எழுதியிருந்தார்.
பின்னர் தமிழில் கமர்ஷியலாக ஒரு படம் பண்ண வேண்டும் என்று நான் கதைகளை தேடியபோது இந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற ‘கான்சாகிபு சண்டை’ என்கிற பாடலை படித்தேன். இப்போது அந்த மனிதர் பற்றி படிக்கவும், பேசவும், தெரிந்து கொள்ளவும் முடிகிறது என்றால் அதற்கு ஆரம்ப விதை போட்டது அந்த கான்சாகிபு சண்டை என்கிற பாடல்தான்.
அந்த பாடலில் இருந்து எழுந்த கதாநாயகன் பெயர் முகமது யூசுப்கான் அல்லது மருதநாயகம் என்கிற தமிழ் வீரன்” என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய கமல், “நம் நாட்டார் வழக்கு மொழிகளில் இருக்கும் இந்த பாடல்களை நம் மொழியில் மட்டும் இல்லாமல், எந்த மொழியிலும் பாதுகாக்கவேண்டும். நாம் நடந்து வந்த கால்தடங்கள் அதில் இருக்கின்றன. நிஜமான சரித்திரங்கள் அதில் கரையாமல் உறைந்துபோய் இருக்கின்றன. அவற்றை தேடி பார்த்து படித்து புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.