பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனின், முதல் நாள் கலகலப்பாக தொடங்கியது. அனைவரும் அறிமுகப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் 2வது நாளில் அவரவர் எந்தெந்த வேலைகளை அந்த வீட்டுக்குள் பார்ப்பது என்பது தொடர்பான பேச்சுகள் எழுந்தன. குறிப்பாக இந்த பிரிவுகளுக்கு கேப்டன்களும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். தானாக முன்வந்து கேப்டன் பதவிகளை ஏற்றுக் கொண்ட ராஜூ, சின்னப்பொண்ணு, பாவனி மற்றும் நமீதா தங்களுடைய டீமுக்கு ஆட்களையும் தேர்வு செய்தனர்.
ஒரு பக்கம் பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபுல் பார்மில் இருக்கும் ராஜூ, அக்ஷராவை பார்த்து அமலா மாதிரி இருப்பதாக கூற, சற்றே பயந்த அக்ஷராவுக்கு, “எந்த அமலா?” என்று குழப்பம் உருவானது. ஒரு வழியாக தான் குறிப்பிட்டது, அமலா பால் அல்ல பழைய நடிகை அமலா என்று ராஜூ கூறுகிறார்.
அப்போது, “யாராக இருந்தாலும் அமலா என்று சொன்னால், இப்போது இருக்கும் அமலா பால் தான் நினைவுக்கு வரும்” என்று அக்ஷரா கூற, எப்படியோ கடைசி வரை, இந்த காம்ப்ளிமென்ட்-க்கு நன்றி கிடையாதா என்று நன்றியை கேட்டு வாங்கிக் கொண்டார் ராஜூ.
அது மட்டுமா.. திகில் கதையை சொல்லி தாமரைச் செல்வியை பயமுறுத்தியது போதாது என்று பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததுமே பிரியங்காவிடம் வாயை கொடுக்க, அவரோ தலை முடியில் இருந்து சில சவுரி முடியை எடுத்து கையில் கொடுத்து தலைதெறிக்க விட்டார்.
பிறகு பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு ஐவர் கூட்டணி உருவானது. பிரியங்கா தலைமையில் ஒரு குட்டி மாநாடே நடத்தப்பட்டது. பிரியங்கா, ஸ்ருதி, நதியா, இசைவாணி இவர்களுடன் நம்ம ஐக்கி பெர்ரி ஐக்கியமாக, இவர்களுடன் இமான் அண்ணாச்சி இணைந்துகொண்டார்.
அப்புறம் என்ன? அனைவரும் சேர்ந்து நோ என்கிற வார்த்தையை சிரித்தும், அழுதும், கோபமாகவும் கோரஸாக சொல்லி ஸ்கோர் பண்ண, ஒரே ரகளைதான் போங்க. அடுத்து நம் ஏரியா. ஆம், சமையல் பிரிவைப் பொறுத்தவரை (அடுப்பு) சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம்.
சூடான டீ, சூர்யவம்சம் ஸ்டைலில் இட்லி உப்புமா என களைகட்டத் தொடங்கிவிட்டது சமையல் பிரிவு. இந்த கலகலப்பு அடுத்தடுத்த வாரங்களில் கைகலப்பு ஆகாமல் இருந்தால் சரிதான் என்று ரசிகர்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.