விஜய் டிவியில் பிரபலமான ஷோவாகவும் அனைத்து வகையான மக்களையும் கட்டிப்போட்ட ஒரு ஷோவாகவும் திகழ்ந்த ஒரு ஷோ என்றால் அது பிக்பாஸ் தான்.
நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்று தெரிந்ததுமே பிக்பாஸ் முதல் சீசன் களைகட்ட தொடங்கியது. தற்போது நான்கு சீசன் வரை பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்திருக்கிறது. இதில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாம் சீசனில் ரித்திகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டில் கார்டு வென்றுள்ளனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்கிற புதுமையான நிகழ்ச்சி வரும் வாரத்திலிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதனிடையே பிக்பாஸ் முதல் சீசனில் பிரபலமான போட்டியாளரான ஜூலி என்கிற மரியா ஜூலியானா நேரலையில் ரசிகர்களுடன் உரையாடினார். இதில் பிக்பாஸ் ஜோடிகள் ஷூ சூட்டிங்கில் தான் கலந்து கொண்டதாகவும் தம்முடைய ஜோடி சென்றாயன் என்றும் குறிப்பிட்டதோடு ஓவியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சொல்லி பேசத்தொடங்கினார்.
இடையிடையே தம்மை அநாகரிகமான வார்த்தைகளால் வறுத்தெடுத்த வெறுப்பாளர்களிடம் உடனடியாக கோபப்பட்டு பொங்கி எழுந்த ஜூலி அவ்வப்போது அவர்களை மிகவும் நாகரீகமாகவே அறிவுரை கூறும் தொனியிலேயே திட்டிவிட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத போது, “கெட்ட வார்த்தை பேசினால் முகத்தை வந்து நேரலையில் காட்டு” என்று ஒருவரிடம் கூறுகிறார்.
இன்னொருவரிடம், “ஒருவரை பிடிக்கவில்லை என்றால் போய் விடுங்கள். நீங்கள் ஏன் இதில் எல்லாம் தலையிடுகிறீர்கள். நான்கு வருடமாக ஏன் திட்டுகிறீர்கள், அது ஒரே ஒரு முறை நடந்த ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பான ஒரு ஷோ. அதை அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் ஏன் தொடர்கிறீர்கள். நான் எதையும் என் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. என் வேலையை தான் நான் பார்க்கப் போகிறேன். இருந்தாலும் அவ்வப்போது ஹர்ட் ஆகிறது அதை உடனடியாக வெளிப்படுத்தினால் தான் மற்றவர்களை இவர்கள் ஹர்ட் பண்ண மாட்டார்கள்!” என தம் ரசிகர்களுக்கு விளக்கம் சொல்லிவிட்டு மீண்டும் ரசிகர்களுடன் உரையாடலை தொடர்ந்தார்.
மேலும், ஜூலி தாம் இன்னும் செவிலியர் பணியை அவ்வப்போது பிராக்டீஸ் செய்வதாகவும், அறுவை சிகிச்சைகளின் போது அசிஸ்ட் செய்யும் மேற்படிப்பு படித்துள்ளதாகவும் அதற்கான அவசர நேரம் வரும் பொழுது அவற்றிலும் பங்களிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அத்துடன் ஆர்மி என்கிற வார்த்தைக்கெல்லாம் நாங்கள், குறிப்பாக நான் தகுதியானவள் இல்லை. ரசிகர்கள் இருக்கலாம். ஆர்மி எனும் வார்த்தைக்கு தகுதியானவர்கள் உண்மையில் (எல்லையில் நின்று) போராடுபவர்கள் மட்டுமே என்று குறிப்பிட்டார். இதேபோல் தாம் சில படங்களில் நடித்து வருவதாகவும் ஏற்கனவே நடித்த அம்மன் திரைப்படத்தை இரண்டு இயக்குநர்கள் எடுத்ததால் அந்த சிக்கலை அவர்கள்தான் தீர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் ஜூலியின் நேரலை காட்சிகளை இணைப்பில் இருக்கும் வீடியோவில் காணலாம்.