பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 78 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர்.
ஒருநாள் விடிந்தால் அந்த நாளின் ட்ரெண்டிங்கான பல விஷயங்களில் ஒரு முக்கியமான விஷயமாக பிக்பாஸ் இருக்கிறது என்பது தவிர்க்க முடியாதது. இதில் தினம்தினம் போட்டியாளர்கள் என்ன பேசுவார்கள்? என்ன கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள்? அவர்களுக்குள் என்ன விதமான முர்ண்கள் எழுகின்றன உள்ளிட்ட அனைத்துமே பார்வையாளர்களால் கவனிக்கப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் போட்டியாளர்கள் செய்த நிறைகுறைகளை வார இறுதியில் தோன்றி சுட்டிக்காட்டுகிறார். இறுதியில் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒரு டைட்டில் வின்னர் தேர்ந்தெடுக்கப்பட போகிறார். அதை நோக்கி தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 10 போட்டியாளர்கள் கிராண்ட் ஃபினாலே என்கிற ரேஸில் ஈடுபட்டிருக்கின்றனர்.
எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் ஏறக்குறைய தங்களுடைய கதைகளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருக்கின்றனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு பின் சிறப்பு வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளராக வளர்ந்தவர் நடிகர் மற்றும் சின்னத்திரை நடிகர், தொகுப்பாளர் மற்றும் நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்.
சஞ்சீவ் தமது ஸ்டோரியை பிக்பாஸ் வீட்டுக்குள் தற்போது கூறியிருக்கிறார். அதில், “நான் பிறந்தது எல்லாமே சென்னை தான். ஒரு ஜாலியான குடும்பம். நானும் அக்காவும் தான் வீட்டில்.. ஐந்தாம் வகுப்பு வரை 5 பேர் கொண்ட நண்பர்கள் குழுவாக இருந்தோம். அதன் பிறகு கல்லூரியில் விஜய் இணைந்தார். நாங்கள் 6 பேர் நண்பர்களாக ஆனோம். லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் பொழுது தான் நாங்கள் நண்பர்கள் ஆனோம்.
பிறகு அக்கா நடிக்கத் தொடங்கினார். நடிக்கும்போது சிந்து என பெயர் மாற்றிக்கொண்டார். மஞ்சுளா மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோர் எங்களுக்கு நெருக்கமானவர்கள். அவர்கள் அவ்வப்போது சூட்டிங் குறித்துப் பேசுவார்கள். வீட்டுக்கு எல்லாம் வருவார்கள். அவர்கள் சொன்னதால் எனக்கு நடிக்க வேண்டும் என்று தோன்றியது. விஜய் நடித்த நிலாவே வா திரைப்படத்தில் விஜய்யின் நண்பராக நடித்தேன்.
எனினும் நான் படிக்கவில்லை என்கிற கவலை அப்பா, அம்மாவுக்கு இருந்தது. அக்கா டெலிவிஷனில் நடித்துக் கொண்டிருந்தார். அதே சீரியலில் இருந்து வில்லனாக நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அக்காவுக்கு திருமணம் ஆகி, விவாகரத்து நடந்து அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவருக்கு வீசிங் பிரச்சினை இருந்தது.
ஒருமுறை, சாப்பிட உட்காரும் பொழுது அருகில் தான் உட்கார்ந்திருந்தாள் அக்கா. திடீரென்று எப்போதும் வருவதுபோல அவளுக்கு வீசிங் வருவதாய் செய்கை காட்டினாள். அது அவளுக்கு வழக்கம் போல் வருவதுதான், அதனால் மூச்சு இழுக்கும் கருவியை வைத்து மூச்சு இருக்கச் சொல்லிவிட்டு நானும் என் நண்பரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென எதிர்பாராத விதமாய் மயக்கம் ஆகிவிட்டாள். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
காலையில் அழகாக பிளாக் அண்ட் பிளாக்கில் அக்காவை பார்த்த எனக்கு மருத்துவமனையில் இருந்த அந்த திரைச்சீலையை விலக்கி பார்த்ததும் அதிர்ச்சி. துணியே இல்லாமல் இருந்தார் அக்கா. என்னடா துணியில்லாமல் இருக்கிறாரே என்று அதிர்ந்து பார்த்தபோது, அவருடைய நெஞ்சில் ஒரு கருவியை வைத்து, சினிமாவில் வருவது போல் பம்ப் செய்து, அவளை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
கஷ்டமாக இருந்தது அப்பவே எனக்கு தெரிந்தது. இது கஷ்டம் என்று தெரிந்துவிட்டது. மூன்று நாட்களில் அவளது இறப்பை உறுதி செய்தார்கள் மொத்த குடும்ப பாரமும் என் மேல் விழுந்தது. அப்போது நான் சம்பாதித்து கொண்டிருந்தது, ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சீரியலில். என் அக்காவை எரிக்கும் போது கடைசியாக நான் சொன்னது, அவள் மகளை நான் காப்பாற்றி விடுவேன்.. கவலைப்படாதே! என்பதுதான்.” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய்யின் 30 ஆண்டுகால வலுவான நட்பு, தன் மனைவி தனக்கு உறுதுணையாக இருப்பது, பெரிய ஹீரோயினுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க முடிவாகி, லாக்டவுனால் திட்டம் மாறியது உள்ளிட்ட அனைத்தையும் பற்றி பேசிய சஞ்சீவ், பிக்பாஸில் இருந்து அடுத்த கட்டமாக இன்னும் நிறைய நல்ல படங்களில் நடிக்க எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார்.