விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக முடித்துவிட்டது. 4வது சீசனில் நடிகர் ஆரி வெற்றி பெற்றார்.
ஆனால் எந்த சீசனாக இருந்தாலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மாறுவார்களே தவிர பிக்பாஸின் குரல் மாறியதில்லை. ஒரு நேரத்தில் அதிகாரம், இன்னொரு நேரத்தில் அரவணைப்பு, ஒரு நேரத்தில் வழிநடத்திச் செல்வது என விதவிதமான உணர்வுகளை பிரதிபலிக்கும் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பதை இன்னும் வெளியில் சொல்லாமல் வைத்திருக்கிறார்கள்.
ஒரு சீசன் முடியும் பொழுதும் அந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் பிக்பாஸை மிஸ் பண்ணுவதாக உணர்வார்கள். போட்டியாளர்களை மிஸ் பண்ணுவதாக உணரும் பார்வையாளர்களும் பிக்பாஸை மிஸ் பண்ணுவார்கள். இந்த நிலையில்தான் சச்சிதானந்தம் என்னும் குரல் கலைஞர் மற்றும் நடிகர் ஒருவரின் பெயர் பிரபலமாகி வருகிறது. ஹிந்தி படம் வரையில் நடித்த இவர் தமிழர் தான் என்ற போதிலும் பிக்பாஸின் அந்தக் குரலுக்குச் சொந்தக் குரல் இவருடையது தான் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.
ஆனால் பிக்பாஸ் என்னும் அந்த குரல் யாரென்று தெரியும் வரை தான் அதன் சுவாரஸ்யம் என்பதால் உண்மையில் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அதனால் சச்சிதானந்தம் உண்மையில் பிக்பாஸாக குரல் கொடுக்கிறார் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை. இதனிடையே அவ்வபோது மெசேஜ் சொல்லி தமது சோசியல் மீடியா பக்கத்தில் சச்சிதானந்தம் சில வீடியோக்களை பகிர்வார். அப்படி அவர் அண்மையில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில் பிக்பாஸ் கடைசி சீசனின் போட்டியாளர் பாலா ஒரு வைரலான கமெண்டினை பதிவிட்டுள்ளார்.
அந்த கமெண்டில் அவர், “என்ன அண்ணே எப்படி இருக்கீங்க?” என்று கேட்டு இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸிடம் தன்னை தம்பியாக ஏற்றுக்கொள்ளுமாறு பாலா கோரிக்கை வைக்க, பிக்பாஸூம் அதை ஏற்றுக் கொண்டார். அதை நினைவூட்டும் விதமாக பாலாவுடைய இந்த கமெண்ட் இருக்கிறது. ஆனால் சச்சிதானந்தம் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அடுத்த சீசன் எப்போது வரும் எப்போது பிக்பாஸ் குரலை மீண்டும் கேட்கலாம் என்று பிக்பாஸ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.