BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஆரம்பமாகி உள்ள நிலையில், GP முத்து மற்றும் கமல் இடையே நடந்த உரையாடல் தொடர்பான பதிவுகள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், முதல் போட்டியாளராக டிக் டாக் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து, முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்தார். தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடியை அடுத்த வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் GP முத்து. இவருக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும், பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும் அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்களும் மிகவும் பிரபலம் ஆனவை.
அந்த வகையில், ஆறாவது சீசனின் முதல் போட்டியாளராக GP முத்து களமிறங்கி இருந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் கேமரா முன்பு சென்று அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, கமலிடம் உரையாடிய GP முத்து, தனியாக வீட்டிற்குள் இருப்பது பயமாக இருக்கிறது என்றும், மற்றவர்களுடன் சேர்ந்து உள்ளே வருகிறேன் என்றும் குறிப்பிட்டார்.
இதுவும் போட்டியின் ஒரு பகுதி என கூறிய கமல், அடுத்த நபர் காலை 4 மணிக்கு தான் உள்ளே வருவார் என்றும் கூறுகிறார். இதனைக் கேட்டதும் பதறிய ஜிபி முத்து, 4 மணி என்றால் மூச்சே போய்விடும் என்றும், அப்படி எல்லாம் செய்யாதீர்கள் என பயத்திலேயே குறிப்பிடுகிறார். இதன் பின்னர், வேண்டுமென்றே கமலும் அதிகம் பயமுறுத்த கதிகலங்கி போகிறார் ஜிபி முத்து.
இது பற்றிய பதிவுகள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.