விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் 106 நாட்கள் நடைபெற்று கடந்த 2018 செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிந்தது. இந்த சீசனில் வெற்றி பெற்று தமிழ் மக்கள் இதயத்தில் இடம் பிடித்தவர் தான் நடிகை ரித்விகா.
இவர் தான் தற்போது தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ் உருவாகியுள்ள ‘என் அருமைக் கன்னுக்குட்டி’ எனும் விழிப்புணர்வு படத்தில் நடித்துள்ளார்.
இதில் பிரபல ‘ஜோக்கர்’ திரைப்படத்தில் பிக்பாஸ் ரம்யா பாண்டியனுடன் இணைந்து நாயகனாக நடித்த நடிகர் குரு சோமசுந்தரம் ரித்விகாவின் தந்தையாக நடித்து அசத்தியுள்ளார். அவரது மகளாக ரித்விகா நடித்துள்ளார்.
கூகுள் மேப்பில் கூட காட்டாத குக்கிராமத்தில் இருந்து கல்லூரி வரை படித்த முதல் பெண்ணாக வளரும் ரித்விகா, தன் சிறு வயது மகளை ஸ்கூட்டியில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவதை சிலர் கிண்டல் செய்கின்றனர். அங்கிருந்து தன் பசுமையான கிராமத்தின் பால்ய நினைவுகளை அசைபோடுகிறார் ரித்விகா.
எருமை மாட்டுப் பால் காரரான குரு சோமசுந்தரம் எருமை மாடு மீது அமரவைத்து ‘என் அருமைக் கன்னுக்குட்டி’ என பாடிக்கொண்டே தன் சிறு வயது மகள் ரித்விகாவை பள்ளிக்கு அழைத்துச் செல்வது தூர்தர்ஷன் காலங்களில் வெளியான பாடலை நினைவூட்டுகிறது.
பெண் குழந்தைகளுக்கு அடுப்படி வேலையும், வீட்டு வேலையும் தான் முக்கியம் என நினைக்கும் தன் மனைவியின் பிற்போக்குத் தனத்தை விமர்சிக்கும் குரு சோமசுந்தரம் தன் மகளான சிறு வயது ரித்விகாவை படிக்க வைப்பதில் கவனமாக இருக்கிறார். பிற்காலத்தில் ரித்விகா தனது செல்ல மகளை பள்ளி சென்றுவிடும்போது இவற்றையெல்லாம் நினைத்து பார்க்கிறார்.
நிகழ் காலத்தில் நன்கு படித்து கல்லூரி பேராசியராக முன்னேறியுள்ள, ரித்விகா தன் மகளையும் தன் அப்பா தன்னை படிக்க வைத்தது போலவே கண்ணும் கருத்துமாக படிக்க வைப்பதுடன் குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை படிக்க வைப்பது பெற்றோரின் கடமை என கூறுகிறார். ‘பெண் குழந்தைகளின் படிப்பை எக்காரணத்தைக் கொண்டும் பாதியில் நிறுத்தாதீங்க’ என குரு சோமசுந்தரம் இறுதியில் கூறுகிறார்.
பசுமை மாறா கிராமம், ஃபிளாஷ் பேக், நிகழ் காலம் என ஒளிப்பதிவில் கவனம் ஈர்க்கிறார் செழியனின் உதவி ஒளிப்பதிவாளரான வீர குமார். படத்துக்கு ஜி ஜி எம் இசையமைத்துள்ளார். இந்த அருமையான கருத்துள்ள குறும்படத்தை “பெண் குழந்தைகளை பாதுகாப்போம்.. பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்!” என்கிற வாசகங்களுடன் கூடிய விழிப்புணர்வு படமாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு குறும்படத்தை இயக்குநர் வளர்மதி எழுதி இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தை இணைப்பில் காணலாம்.