தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில், ஜிபி முத்து பயந்து பதுங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தருணமும் பரபரப்பாகவும், சுவாரஸ்ய நிகழ்வுகளுடனும் சென்று கொண்டிருக்கிறது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியும் வருகிறது.
ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராப் சிங்கர் ஆர்யன் தினேஷ் (ADK), பிரபல தொகுப்பாளினி ஜனனி, நடிகை ஆயிஷா, நடிகை ரச்சிதா உள்ளிட்ட 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்தது முதலே தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு ஆர்மி வரை உருவாக்கி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த ஜிபி முத்துவிற்கு நடந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
டிக்டாக் மற்றும் யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ஜிபி முத்து. இவர் தான் பிக்பாஸ் ஆறாவது சீசனில் முதல் போட்டியாளராகவும் வீட்டிற்குள் நுழைந்திருந்தார். வீட்டிற்குள் சென்றதும் தனியாளாக இருப்பதால் கமலிடம் பயத்தில் ஜிபி முத்து பேசும் வீடியோக்கள் பிக்பாஸ் ஆரம்பத்தையே ரணகளமாக மாற்றி இருந்தது.
மிகுந்த பயந்த சுபாவத்துடன் பிக்பாஸ் வீட்டில் காலடி எடுத்து வைத்த ஜிபி முத்து, இரவில் போர்வை போர்த்திக் கொண்டு தூங்கிய படி இருக்க, ராபர்ட் மாஸ்டர் கீழே பதுங்கி இருந்த படி, போர்வையை இழுக்கிறார். இதனை அறிந்ததும் ஒரு நிமிடம் பதறிப் போன ஜிபி முத்து கட்டிலில் இருந்து கீழே உருண்டு விழவும் செய்கிறார். உடனடியாக சக போட்டியாளர்கள் அவரை வந்து எழுப்பி தேற்ற அங்கு முழுவதும் சிரிப்பலையும் உருவாகிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் ஜிபி முத்து நுழைந்தது முதலே அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் ரசிகர்களின் லைக்குகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.