பிக்பாஸ் வீட்டினுள் உள்ள GP முத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசனிடம் கண்கலங்கியபடி பேசியிருக்கிறார்..

கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 தினந்தோறும் நடைபெறும் பல்வேறு விதமான வேடிக்கைகள், கிண்டல் நிறைந்த விவாதங்கள், டாஸ்க்குகள் என களைகட்டத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே இந்த சீஸனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக இந்த சீஸனின் முதல் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட GP முத்து தனது குடும்பத்தினரிடம் பேசும்போது கண்கலங்கிவிடுகிறார். எப்போதும் கலகலப்பாக வலம்வரும் GP முத்து, சக போட்டியாளர்களிடமும் ஜாலியாகவே உரையாடி வருகிறார்.
அவருடைய வெள்ளேந்தியான பேச்சும், அவரது குறும்பு மிக்க நடவடிக்கைகளும் வீட்டை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. இதனிடையே அவர் குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் தினந்தோறும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. அதே நேரத்தில் தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்கமுடியவில்லை என தெரிவித்துவந்த GP முத்து, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில், கமல்ஹாசனிடம் கண்கலங்கியபடி பேசியிருக்கிறார் முத்து. அதில் கமல்ஹாசன் பேசுகையில்,"முத்து, நீங்க அலைபாஞ்சுகிட்டே இருக்கீங்க.. நாலஞ்சு நாட்களாக அது அதிகமான மாதிரி எனக்கு தோணுது. சொல்லுங்க என்ன பிரச்சனை?" எனக் கேட்கிறார்.
இதற்கு பதில் அளித்த முத்து,"எனக்கு என் பையனை பாக்கணும். உடம்பு சுகமில்லை அவனுக்கு" என்கிறார். தொடர்ந்து பேசும் கமல்,"உங்களை ரசிக்கிறவங்க நெறய பேரு இருக்காங்க. இதை உங்க பிள்ளைகள் கேட்டுட்டு இருக்காங்க. விஷ்னு கேட்டுட்டு இருக்காரு இந்த கைதட்டல்களை எல்லாம். உங்க முடிவு என்ன?" என நேரடியாக முத்துவிடம் கேட்கிறார். அப்போது கண்கலங்கியபடி பேச முற்படுகிறார் முத்து.