விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், டைட்டிலை வென்ற முகென் ராவ் தனது சொந்த நாடான மலேசியாவிற்கு திரும்பினார்.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி வரை வலுவான வெற்றியாளராக அறியப்பட்ட முகென் ராவ், டிக்கெட் டூ ஃபினாலே-வில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிப்பெற்றார். அத்துடன் மக்கள் மனதில் இடம்பிடித்த முகென், சுமார் 7 கோடி வாக்குகளை பெற்று பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். முகென் ராவிற்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
மலேசியாவைச் சேர்ந்த முகென் ராவ், பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக இந்தியா வந்து, தமிழக மக்களின் இல்லங்களில் ஒருவராக இன்று அனைவரையும் கவர்ந்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது, முகென் செய்யும் சில சில கைவினைப் பொருட்கள், அலங்காரங்கள், பாடல் பாடுவது என்பன மக்களை வெகுவாக கவர்ந்தது.
குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு முன்பாக சூப்பர் சிங்கர் மியூசிக் பேண்ட் உடன் முகென் பாடிய, ‘சத்தியமா நான் சொல்லுறேன் டி’ பாடல் இணையதளங்களில் படு வைரலானது. இந்நிலையில், பிக் பாஸ் போட்டியை வென்று, வெற்றிக் கோப்பையுடன் தனது சொந்த நாடான மலேசியாவிற்கு திரும்பினார் முகென் ராவ்.
இதையொட்டி மலேசிய விமான நிலையத்தில் முகென் ராவ்-க்கு ஏராளமான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கெத்தாக எண்ட்ரி கொடுத்த முகெனுடன் பலரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதுடன், தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.