ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார். இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இந்த நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆகப் போகிறார்கள் என்கிற பரபரப்பு பார்வையாளர்கள் மத்தியில் தொற்றி இருந்தது. அதற்கு இந்த வார இறுதியில் விடை கிடைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதன்படி நடிகர் கமல்ஹாசன் இந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ஒவ்வொரு போட்டியாளரையும் யார் வெளியே போகப் போகிறார்கள் என்கிற கருத்தை கேட்டார். அதன்படி, பல போட்டியாளர்கள் ஆயிஷா பெயரையும் இன்னும் சில போட்டியாளர்கள் ஷெரினா பெயரையும் குறிப்பிட்டனர்.
இதற்கு ஆயிஷாவோ, “நான் தான் வெளியே போவேன்” என்று கூறினார். மேலும் தான் வெளியே செல்ல ஆசைப்படுவதாகவும் கூறினார். இந்த வாரம் முழுவதுமே பெரிதாக ஆக்டிவாக இல்லாமல் இருந்து வரும் ஆயிஷா, பிக் பாஸ் வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை” என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால் அதற்காகவெல்லாம் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்பி விட மாட்டார்கள் என்று சக போட்டியாளர்கள் கமல்ஹாசனிடம் தங்களுடைய கருத்தாக முன்வைத்தனர்.
இதே போல் ஷெரினா தன்னுடைய மொழி காரணமாக அவ்வப்போது மலையாளத்தில் ஆயிஷாவுடன் பேசியது பெரிய பிரச்சனையானது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழில் தான் பேச வேண்டும் என்று கமல்ஹாசனம் கடந்த வாரமே எச்சரிக்கை கொடுத்து இருந்தார். அதன் பிறகும் ஷெரினா அதேபோல் நடந்து கொண்டிருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. இதன் காரணமாக, தான் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அவராகவே கூறினார். இறுதியில் இந்த வாரம் வெளியேறக்கூடிய போட்டியாளர் ஷெரினாதான் என்பதை கமல்ஹாசன் அறிவித்தார். தம்முடைய அறிவிப்பு சீட்டில் மலையாளத்தில் ஷெரினா என்று எழுதப்பட்ட சீட்டை கமல்ஹாசன் முதலில் தூக்கி காட்டினார். அதன் பிறகு ஷெரினா என தமிழில் எழுதப்பட்ட சீட்டை காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.