ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில், பங்கேற்றுள்ள இளம் போட்டியாளர் குயின்ஸி. குயின்ஸி ஸ்டான்லி எனும் குயின்ஸி, கோவையை சேர்ந்த மாடல் மற்றும் முழு நேர நடிகையாக இயங்கி வருகிறார். சிறு வயதில் இருந்தே அழகி போட்டி, ராம்ப் வாக் ஆகியவற்றை டிவியில் பார்த்து தீரா ஆசை கொண்ட குயின்ஸி, அதற்கான ஈடுபாட்டையும் வளர்த்துக் கொண்டு, கல்லூரி 2வது வருடம் முதலே மாடலிங் பண்ண தொடங்கிவிட்டார்.
அதுவும் ஓரிரு நாள் அல்ல. சுமார் 4 முதல் 5 வருடங்களாக கடும் உழைப்புக்கு பின் இந்த துறையில் ஜொலிக்க தொடங்கிய குயின்ஸி, தொடர்ந்து 3 திரைப் படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார். வீட்டில் ஒரு ரகடு அப்பா, இனிமையான அம்மா இருப்பதாக கலகலப்பாக பேசும் குயின்ஸிக்கு பாட்டிதான் ஃபேவ்ரைட்டாம். 90 % தன் பாட்டி போலவேதான் தானும் என கூறும் குயின்ஸி, பாட்டி இல்லாமல் தானும், தான் இல்லாமல் பாட்டியும் இருப்பது கடினம் என கூறுகிறார்.
மேலும் மிகவும் எளிமையான குணமும், விருப்பு வெறுப்புகளையும் தன்னை எளிய மக்கள் புரிந்துகொண்டு, மக்கள் பிக்பாஸில் தன்னை வெற்றிபெற செய்வார்கள் என நம்புவதாக குயின்ஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.