ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளராக தங்களுடைய கதையை சொல்லக்கூடிய நடைபெற்று வருகிறது. முந்தைய சீசன்களை போல் அல்லாமல், போட்டியாளர்கள் தங்களுடைய கதைகளை முழுமையாக செல்லக்கூடிய வாய்ப்பு இந்த முறை இல்லை. இந்தமுறை போட்டியாளர்கள் சொல்லக்கூடிய கதை சுவாரசியமாகவும் இன்ஸ்பிரேஷனாகவும் இல்லை என்று ஒருவர் கருதினால் உடனடியாக வந்து பஸ்ஸரை பிரஸ் பண்ணுவதன் மூலம், தங்களுடைய அதிருப்தியை தெரிவிக்கலாம். அப்படி 3 போட்டியாளர்கள் பஸ்ஸரை அழுத்திவிட்டால், கதை சொல்பவர் தங்களுடைய கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும். இதில் நடிகை மைனா நந்தினி பேசும்போது இருவர் மட்டுமே பஸ்ஸர் அழுத்தியதால், அவர் தொடர்ந்து தன் கதையை பேசி முடித்தார்.
இதில் பேசிய மைனா, “அப்பா அம்மா பெயர் ராஜா, ராணி. பெயரில் மட்டும்தான். மற்றபடி குடும்பத்தில் ரொம்ப கஷ்டாம். ஒருவேளை எனக்கு சத்துணவு கிடைக்கும் என்றுதான் பள்ளிக்கே அனுப்பினார்கள். எனினும் மிக கஷ்டப்பட்டு சென்னையில் ஜூனியர் ஆர்டிஸ்டாக முயற்சித்தேன். Untime-ல ரயில்வே ஸ்டேஷன்ல தான் படுத்துருப்பேன். சிவா விஷ்ணு கோவில்ல பொங்கல் எப்போது போடுவாங்கனு எனக்கு தெரியும். ரங்கநாதன் தெருவில் 50 ரூபாய்க்கு டிரெஸ் வாங்குவேன்.
எப்படியோ ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆனாலும் 1000 பேரில் ஒருத்தியாக, ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம், போட்டி என எல்லாமும் இருந்தது. கோரிப்பாளையம் எனும் படத்தில் நடித்தேன். சுற்றத்தினர், மீடியாவுல நான் தப்பானவளா வருவேன்னாங்க.. ஆனாலும் அப்பா அம்மா சப்போர்ட் எனக்கு இருந்தது. முழு சுதந்திரம் கொடுத்தாங்க.
பிறகு வம்சம் என படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் மைனாவாக நடித்தேன். பிறகு முதல் கல்யாண வாழ்க்கையில் ஏதோ தவறாக நடந்துச்சு. அனாலும் நம்ம எப்படி வாழணும்னு சுத்தி உள்ளவங்க என்ன பேசுனா என்ன? என் வேலைய நான் கரெக்டா பண்ணனும்னு நெனைச்சேன்.. கரெக்டா வாழணும்னு நெனைச்சேன். என்ன தப்பு சொல்ற வேலையை ஒருத்தர் சரியா செஞ்சுட்டு இருக்கும்போது, நான் சரியா வாழ்ற வேலைய நான் பண்ணனும்னு நெனைச்சேன்.. பிடிச்சத சரியா பண்ணேன்.. நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது.. இன்று பிக்பாஸில் இருக்கேன்.. நன்றி” என்று பேசினார்.