பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தகத்தில் சிவாஜி கணேசன் குறித்த பாடத்திட்டம் இடம் பெற்றுள்ளன. நடிகர் சிவாஜி கணேசனுடனான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு 'சிதம்பர நினைவுகள்' என்ற நூலை எழுதியுள்ளார்.
இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு சிவாஜி கணேசன் குறித்த தகவல்கள் பிளஸ் 2 தமிழ் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் சிகரம் பாரதிராஜா இதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ''என் இனிய தமிழ் மக்களே மாபெரும் கலைஞன் தெளிவான உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத்திறன் மூலம் நடிகர் திலகம் நடிப்புச்சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்ட செவாலியர் திரு சிவாஜி கணேசன் அவர்களை பற்றி மலையாள எழுத்தாளர் திரு பாலசந்திரன் கள்ளிக்காடு அவர்கள் தான் சந்தித்த அனுபவங்களை தொகுத்து சிதம்பர நினைவுகள் என்கின்ற நூலாக வெளியிட்டார்.
இதனை சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு புதிதாக உருவாக்கியுள்ள பாடத்திட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடநூலில் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் விதமாகவும் இளம் தலைமுறை மாணவர்கள் அவரை பற்றி அறந்து கொள்ளும் விதமாகவும் பாடத்திட்டத்தில் சேர்த்து சிறப்பித்த தமிழக அரசுக்கு திரைப்படத்துறையின் மூத்த கலைஞன் என்கின்ர முறையில் கலையுலகம் சார்பாகவும், என் சார்பாகவும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.