நடிகர் அருள்நிதியின் அடுத்த படம், ‘திருவின் குரல்’. வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் இந்தப் படம் ‘எமோஷனல் டிராமா’ வகையறா படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு. இப்படத்தில் நடிகர் அருள்நிதியுடன் இயக்குநரும் நடிகருமான இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகை ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சாம்.சி.எஸ் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.
இதில் இயக்குனர் ஹரிஷ் பிரபு, ஹீரோயின் ஆத்மிகா மற்றும் நடிகர் அருள்நிதி பங்கேற்ற பிரத்தியேக பேட்டி Behindwoods சேனலில் இடம்பெற்றது. விஜே நிக்கி உடனான கலகலப்பான இந்த பேட்டியில் பாரதிராஜாவுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகர் அருள்நிதி பேசும் பொழுது, “இயக்குனர் பாரதிராஜா எங்களுடன் கலகலப்பாக செட்டில் இருப்பார். மணி 6 மணி ஆனால் கிளம்பி விட வேண்டும் என்று சொல்வார். அதேதான் எங்களுக்கும் ஆனால் எங்களால் சொல்ல முடியாது. ஒருநாள் விஜிபியில் பாரதிராஜா சாரிடம் கேட்டேன். சார் இவ்வளவு ஜாலியாக இருக்கிறீர்களே? ஆனால் நீங்கள் டைரக்ட் செய்யும் பொழுது இப்படி இருக்க மாட்டீர்களா? என்று கேட்டேன்.
அப்போது அவர், ‘நான் டைரக்ட் செய்யும் போது வேற மாதிரி இருப்பேன்டா’ என்று சொன்னார். பிறகு நான் கேட்டுக் கொண்டதற்காக, அப்படத்தில் வரும் ஒரு காட்சியை என்னை வைத்து டைரக்ட் செய்தார். அது நானும் ஆத்மிகாவும் பங்குபெறக்கூடிய ரொமாண்டிக் காட்சி. அதற்கு ஒருவர் ஒருவருக்கொருவர் ரியாக்ஷன் கொடுக்க வேண்டும். ஆனால் நான் பார்க்கும்போது ஆத்மிகா திரும்பி விடுவார், அதேபோல் ஆத்மிகா பார்க்கும் பொழுது நானும் திரும்பி விடுவேன். இப்படிதான் எங்கள் ரொமான்ஸ். ஆனால் இதை பார்த்துவிட்டு பாரதிராஜா சார், உங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்காதா? என மைக்கில் நேரடியாக கேட்டுவிட்டார். நாங்கள் அதிர்ந்தே போய்விட்டோம்.
இப்படி ஒரு காட்சி டைரக்ட் பண்ணினாலும் டைரக்டராக வேற மாதிரி மிரட்டிவிட்டார். இருப்பினும் அதுவே எனக்கு மிகப்பெரிய கிஃப்ட். அவருடைய இயக்கத்தில் ஒரு காட்சி நடித்ததே எனக்கு பெரிய விஷயமாக இருந்தது. சுவாரசியமான செட் அது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.