விஜய் டிவி சீரியல்களில் முக்கியமான சீரியலாக மாறியுள்ள பாரதி கண்ணம்மா நாளும் நாளும் சென்சேஷனலாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.
பாரதி கண்ணம்மா சீரியலை பொறுத்தவரை, லக்ஷ்மி பாப்பா கண்ணம்மாவிடமும், ஹேமா பாப்பா பாரதியிடமும் வளருகிறார்கள். இவர்கள் இருவருமே இவர்களின் குழந்தைகள் தான் என்பது பார்க்கும் ஆடியன்ஸ், பாரதி கண்ணம்மா தவிர மற்ற கேரக்டர்களான பாரதியின் பெற்றோர், பாரதியின் உடன் பிறந்த சகோதரர் அகிலன், அகிலனின் மனைவி அஞ்சலி என சிலருக்கு தெரியும்.
இதனிடையே ஹேமா கண்ணம்மாவிடம் பிரியமாக இருக்கிறார். லட்சுமி பாரதியிடம் பிரியமாக இருக்கிறார். இதில் ஹேமா கண்ணம்மாவிடம் பிரியமாக இருப்பதை விரும்பாத பாரதி, ஹேமாவை அழைத்துக்கொண்டு அமெரிக்கா செல்வதற்காக முயன்றார். ஆனால் கண்ணம்மாவை ஒரு சமையல் அம்மா என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஹேமாவுக்கு, கண்ணம்மாவை பிரிந்து செல்வதற்கு வருத்தப்பட்டு கொண்டு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது.
அதற்கு ஒரே மருந்து கண்ணம்மா தான் என்று பாரதியின் தோழியான டாக்டர் கூற, பாரதியின் பெற்றோரோ கண்ணம்மாவை சென்று அழைத்து வரச்சொல்லி பாரதியிடம் உறுதியாகச் சொல்லி விடுகின்றனர். இதனால் தன் வீட்டில் வந்து ஒரு வாரம் இருந்து தன் மகள் ஹேமாவை பார்த்துக் கொள்ள முடியுமா என்று பாரதி, கண்ணம்மாவிடம் கோரிக்கை வைக்கிறார்.
ஆனால் கண்ணம்மாவோ, ‘நான் வந்தால் என்னை பயன்படுத்திக் கொண்டு என்னை அவமானப் படுத்தியும் அனுப்புவீர்கள்.. உங்களுக்கு வேண்டுமென்றால் ஹேமாவை என் வீட்டில் வந்து விடுங்கள்.. என் வீடு வசதி இல்லை என்றாலும், அள்ளிக் கொடுக்க அன்பு இருக்கிறது. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று கூறுகிறார். பாரதியும் கோபமாக திரும்பி விடுகிறார். இந்த காட்சிகள் எல்லாம் ப்ரோமோவாக வெளியாகின.
இஒதனிடையே பாரதி, கண்ணம்மா, லட்சுமி, ஹேமா என நால்வரும் ஒரே வீட்டில், அதுவும் கண்ணம்மா வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று விஜய் டிவி தளத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அடுத்து நடக்கப்போவது இது தானா? இந்த குடும்பம் ஒன்று சேர்ந்துவிட்டதா? அல்லது இது கனவா? என்றெல்லாம் பேசி வருகின்றனர்.
எனினும் இதுவரை வந்த ப்ரோமோக்களை பார்க்கும்போது, பாரதி ஹேமாவை அழைத்துக்கொண்டு கண்ணம்மாவின் வீட்டில் தங்கி ஒரு வாரம் இருந்து விட்டு போவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ரசிகர்கள் கருதுகின்றனர். எனினும் அப்படி நடந்தால் 8 வருடங்கள் கழித்து இந்த தம்பதியினர் இப்படி ஒன்றாய் ஒரே வீட்டில் இருப்பது என்பது இந்த சீரியலின் ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்து தான் என்பதில் சந்தேகமில்லை.