இயக்குநர், திரைக்கதை மாஸ்டர், நடிகர் என பலமுகங்களை கொண்டவர் கே.பாக்யராஜ்.
அண்மையில் விழா ஒன்றில் அவர் பகிர்ந்துள்ள குட்டி ஸ்டோரி ஒன்றை அவரே தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் இந்த நேரத்தை ஒட்டி பாக்யராஜ் இந்த குட்டி ஸ்டோரியை கூறியுள்ளதுதான்.
பாக்யராஜ் அந்த சுவாரஸ்யமான குட்டிக்கதையைக் கூறும்போது, “ஒருவரின் கடை நன்றாக வியாபாரமாகிக் கொண்டு இருந்தது. எதிரில் கடை போட்ட ஒருவர், சிட்டியில் எல்லா இடத்தை விடவும் எங்கள் பொருள் 1 ரூபாய் குறைவாக தான் இருக்குமே தவிர அதிகம் இருக்காது, இது சத்தியமான உண்மை என போர்டு வைக்கிறார்.
இதை பார்த்த அந்த நன்றாக வியாபாரம் ஆகிக்கொண்டு இருந்த எதிர் கடைக்காரர் தங்களுக்கான ஆலோசகரை அழைத்து கலந்து பேசி மீண்டும் உண்மைக்கு சத்தியம் தேவை இல்லை. எங்கள் கடையின் பொருட்கள் தரமானவை, ஒரிஜினல் மற்ற இடங்களை விட 1 ரூபாய் அதிகமாக தான் இருக்கும், டூப்ளிகேட்டும் தரமற்றவையும் தான் 1 ரூபாய் குறைவாக இருக்கும் என போர்டு வைக்கிறார். இதை பார்த்த மக்களுக்கு இரண்டு பேர் பேசுவதும் நியாயமாக தான் தெரியும். இதனால் ஜனங்கள் கன்ஃபியூஸ் ஆகிவிட்டார்கள்.
ஏன் என்றால் இது தேர்தல் நேரம் இப்படியெல்லாம் தான் பேசுவார்கள். இவர் நல்லா பாசமாக பேசுறாரே?.. அட இவர் தரும் வாக்குறுதிகள் செமையா இருக்கே? என்பது போல் தோன்றும், நேற்றுவரை என்ன செஞ்சிட்டு இருந்தாங்க என கேட்டுவிடக் கூடாது. தேர்தல் நேரத்தில் மட்டும் இப்படி பேசுவார்கள்” என தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசியுள்ளார். இந்த வீடியோவை தன்னுடைய ட்ரேடு மார்க் தாளகதியான, ‘நாதிந்தின்னா.. நாதிந்தின்னா’ என்கிற கேப்ஷனுடன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கே.பாக்யராஜ்.