Behindwoods Gold Icons விருது விழாவில் மறைந்த நகைச்சுவை கலைஞரான வடிவேல் பாலாஜிக்கான விருது வழங்கி அவரது குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.
இந்த விருதினைப் பெற்றுக் கொண்ட நடிகர் பாலாஜியின் குடும்பத்தினர் கலக்கப்போவது யாரு இயக்குநர் தாம்சனுக்கு நன்றி சொல்லி வடிவேல் பாலாஜி மறைவு குறித்து உருக்கமாக பேசியதுடன் அவருடைய இல்லாமையால் கண் கலங்கினர். இதனை தொடர்ந்து வடிவேல் பாலாஜி பற்றி பேசிய தாம்சன், “நகைச்சுவை கலைஞர்களுக்கு பின்னாலிருக்கும் வலியை நாம் பார்க்க முடியாது. நாங்களே வடிவேல் பாலாஜியின் பின்னால் இருக்கும் வலியை முழுமையாக அறிந்ததில்லை! ஒரு மேடையில் தோன்றும் ஒரு நகைச்சுவைக் கலைஞர் அதிகபட்சம் 50 அல்லது 100 பேரை சிரிக்க வைக்கலாம் என்றால் ஆயிரம் பேரையும் சிரிக்கவைக்க கூடிய திறமை படைத்தவர் வடிவேல் பாலாஜி மட்டும் தான்!” என்று பேசினார்.
பின்னர் இதனை தொடர்ந்து பேசிய கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் புகழ், “வடிவேல் பாலாஜி மாமா எனக்கு களம் கொடுத்து, நான் நடிப்பதற்கு நிறையவே உதவினார். என் திறமையை வெளிக்கொண்டுவர இடம் கொடுத்தவர். இன்று நான் வளர்ந்து வருகிறேன், என் வளர்ச்சியை பார்க்க என் மாமா வடிவேல் பாலாஜி என்னுடன் இல்லை. நான் கார் வாங்கி இருக்கிறேன் அதைக் காண்பதற்கு அவர் இல்லை. நான் வளர்ந்து வரும் காலகட்டத்தில் என் மாமா என்னுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அவருடைய மறைவு...” என்று எமோஷனலாக அழத் தொடங்கிவிடுகிறார்.
தொடர்ந்து பேசிய தங்கதுரை அன்மையில் வடிவேல் பாலாஜி போலவே, தானும் வடிவேலு கெட் அப் போட்டதாகவும் அப்போது நடிகர் சிவகார்த்திகேயன், தன் வேடம் வடிவேல் பாலாஜி நினைவுபடுத்துவதாக கூறியதாகவும் குறிப்பிட்டு, “இனி வடிவேல் வேடத்தை போடும் யாரும் வடிவேல் பாலாஜியை தவிர்க்க முடியாது!” என்று குறிப்பிட்டார்.
இதேபோல் தொகுப்பாளர் மற்றும் நடிகர் ரக்ஷன் பேசும்போது, “ஒருவர் இருக்கும் பொழுது அவருடன் நேரம் செலவிட வேண்டும் என்பது நமக்குத் தோன்றவில்லை. அவர் இல்லாத போதுதான் அவரிடம் அதிக நேரம் செலவிட்டு இருக்கலாமோ என்று தோன்றும். அந்த வருத்தம் இப்போது உருவாகிறது!” என்று உணர்ச்சி பட பேசினார். இந்த விருது வழங்கும் நிகழ்வின் முழு காணொளி வீடியோவையும் இணைப்பில் காணலாம்.