கடந்த ஜூன் 14-ம் தேதி அன்று நடிகர் சுஷாந்த் சிங் தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது இந்த வழக்கை பாந்த்ரா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில் சுஷாந்தின் நண்பர்கள் மற்றும் அவரது முன்னாள் காதலியான ரியா சக்ரபர்த்தியிடம் விசாரணை நடத்தி முடித்தனர். இந்நிலையில், தற்போது அவரது நெருங்கிய தோழியான ரோகினி ஐயரிடம் போலீஸார் நேற்று காலை விசாரணையை நடத்தினர். அந்த விசாரணையில் ரோகினியின் வாக்குமூலம் குறித்து போலீஸார்தகவல் எதுவும் வெளியிடவில்லை.
சுஷாந்துக்கு பாலிவுட்டில் அதிக நண்பர்கள் கிடையாது. அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் ஒருவரான ரோகினி ஐயர், சுஷாந்த் சிங் மரணம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது சுஷாந்த் சிங் என்னுடைய சிறந்த நண்பர் அவர் இப்போது இல்லை. அதை ஏற்றுக் கொள்ள இன்னும் என்னால் முடியவில்லை. தொடக்கத்திலிருந்தே சுஷாந்த் சிங் தன் புகழ் மற்றும் தன்னை குறித்த மற்றவர்களின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. போலவே தனக்கு நெருக்கமானவர்களைத் தவிர மற்றவர்கள் எழுதும் சோஷியல் மீடியா பதிவுகளையும் அவர் கண்டு கொள்வதில்லை.
போலி நண்பர்கள், அர்த்தமற்ற அரட்டைகள் இதெல்லாம் அவருக்கு பிடிக்கது. . பலரைப் போல பார்ட்டி எதுவும் சுஷாந்த்துக்கு தேவைப்படவில்லை. தனக்குத் தானே ஒரு தனி ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டார். சினிமாத் துறை என்பது அவரது வாழ்வில் ஒரு சிறிய பகுதிதான். அதைத் தாண்டி அவரது உலகத்தில் இன்னும் பெரும் பகுதி உள்ளது. அவர் விருதுகள் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அதே போல 100 கோடி பட்ஜெட் படம் கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டதில்லை.
சுஷாந்த் தொண்டு நிறுவனங்களில், அறிவியல் திட்டங்கள் மற்றும் பொதுப்புத்திக்கு அப்பாற்பட்ட பல புதுமையான முயற்சிகளில் முதலீடு செய்தார். எனவே தயவு செய்து அவரைப் புரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள் அல்லது உங்களை பிரபலப்படுத்த அவரது திறமையைக் குறைக்க வேண்டாம்' என குறிப்பிட்டுள்ளார்.
போலீஸ் விசாரணை குறித்து ரோகினி இன்னும் அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.