‘லாக்கப்’, ‘க/பெ ரணசிங்கம்’, 'மதில்’, ‘ஒருபக்க கதை’, ‘மலேஷியா டு அம்னீஷியா’, “டிக்கிலோனா” உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ஜீ5 ஓடிடி தளத்தில் அக்டோபர் 13-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் திரைப்படம் “விநோதய சித்தம்”.
சமுத்திரகனி இயக்கி, தானே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஃபேண்டஸி டிராமா படமான இந்த படத்தின் கதை தம்பி ராமையாவை மையமாக வைத்து சுழல்கிறது.
தன்னால் மட்டுமே தனது குடும்பம், அலுவலகம் எல்லாத்தையும் கவனித்துக் கொள்ள முடியும் என்று நினைத்து, குடும்பத்துக்காகவும், வளர்ந்த தன் மகள்கள், மகன் என அனைவருக்காகவும் உழைத்ததுடன், அவர்களின் வாழ்க்கையில் அனைத்து முடிவுகளையும் பார்த்து பார்த்து எடுக்கும் தம்பி ராமையா திடீரென விபத்தில் இறக்கிறார்.
அதன் பிறகு அவருக்கு செய்து முடிக்க வைக்க வேண்டிய கடமைகள் இருப்பதாகவும், எல்லாம் தான் இருந்தால் தான் நடக்கும் என்றும் தம்பி ராமையா கதறுகிறார். அப்போது காலம் என்கிற பெயரில் சமுத்திரகனி வந்து நிற்கிறார்.
ஆம், ‘என் பெயர் டைம்’ என்கிறார் சமுத்திரகனி. அவர் தம்பி ராமையாவுக்கு 3 மாதங்கள், அதாவது 90 நாட்கள் வாழ்வதற்கான காலத்தை நீட்டிக் கொடுக்கிறார். அதன்பிறகு தம்பி ராமையாவின் குடும்பத்தில் நடக்கும் காமெடி கலந்து எமோஷனல் ஃபேமிலி டிராமாவே மீதிக்கதை.
இந்த படத்தில் தம்பி ராமையாவாக, விஜய் டிவியில் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் நடித்து வரும் தீபக் நடித்துள்ளார். தீபக் ஏற்கனவே ‘இவனுக்கு தண்ணியில கண்டம்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதேபோல், ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘மாரி’, ‘மாரி-2’ ஆகிய படங்களை இயக்கிய, இயக்குநர் பாலாஜி மோகன் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள இப்படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.