இந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் ஹிட் படங்களையும் ஹிஸ்டாரிக்கல் படங்களையும் கொடுத்து வருபவர் எஸ்.எஸ்.ராஜமவுளி. தெலுங்கு மொழியில் பிரதானமாக திரைப்படம் எடுக்கும் ராஜமௌலிக்கு ஆதர்ச இசையமைப்பாளர் தான் எம்.எம்.கீரவாணி எனும் எஸ்.எஸ்.மரகதமணி.
இவர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் நடித்த மகதீரா திரைப்படத்திலும், தொடர்ந்து நானி நடித்த ஈகா(நான் ஈ) திரைப்படத்திலும் இசையமைத்தார். தொடர்ந்து பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் மற்றும் பலர் நடித்த பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களிலும் இசையமைத்து புகழ்பெற்றவர்.
நிறைய பாடல்களையும் எழுதி இருக்கும் இவர், தமிழில் 1991-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மம்மூட்டி, பானுப்பிரியா மற்றும் பலர் நடித்து வெளியான ‘அழகன்’ திரைப்படத்தில் இசை அமைத்ததற்காக தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இவர் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுளி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியிருக்கும் RRR திரைப்படத்தில் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி சென்னைக்கு வருகை தந்திருக்கிறார். சென்னையில் இவர் இசைஞானி இளையராஜாவின் ஸ்டுடியோவில் சென்று அவரை சந்தித்து பேசியிருக்கிறார். இதேபோல் இளம் இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத்தை சந்தித்திருக்கிறார்.
இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள எம்.எம்.கீரவாணி, இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் பதிவிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
இதேபோல், அனிருத்தை சந்தித்தது பற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது செயல்திறன், எனர்ஜி, திறமை கொண்ட இசையமைப்பாளர் என்று கீரவாணி பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார். இது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக அறிவித்துள்ள இசையமைப்பாளர் அனிருத் RRR படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
அனிருத் தற்போது தளபதி 65 திரைப்படமான ‘Beast’ திரைப்படத்தில் இசையமைத்து வருகிறார். இதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்துக்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.