கடந்த 2002-இல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா உள்ளிட்ட ரஜின்காந்த்தின் தொடர் வெற்றிப்படங்களை அடுத்து நான்காவது முறையாக பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
மகா அவதாரமான பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் DI, மிக்ஸிங் போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த பாபா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “பாபா பட சமயத்தில் நாம் பண்ணிய மெனக்கெடலுக்கு அப்போதைய ரெஸ்பான்ஸ் அந்த படத்தில் இருந்த விஷயங்களுக்கு குறைவுதான். இப்போதும் சிறியோர் முதல் பெரியோர் வரை, இன்றைய 2 கே கிட்ஸ் வரை ரஜினி சாரை லவ் பண்ணுகிறார்கள். ரஜினி சாரின் ஸ்டைல் அனைத்தையும் சின்ன மொபைலில் கணினியில் காண்பதை விட, தியேட்டரில் பார்ப்பதே குதூகலம். எனவே படம் மீண்டும் தியேட்டரில் வெளியானால் இன்னும் ரெஸ்பான்ஸ் இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாபா பட பாடலில் இடம்பெற்ற “உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்” எனும் தமிழ் உணர்வு குறித்த பாடல் வரிகள் பற்றிய கேள்விகளுக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பதில் அளித்தார். ரஜினியின் அண்ணாமலை படத்தில் வரும் ‘வந்தேண்டா பால்காரன்’ எனும் தொடக்க பாடலில், “என்னை வாழ வைத்தது தமிழ்ப்பாலு” என்கிற வரிகள் இடம்பெற்றது. இதேபோல் அருணாசலத்தில், ‘அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நானடா’ பாடலில், ‘அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா’ என்கிற வரிகள் இடம்பெற்றன. படையப்பாவின் சிங்கநடைபோட்டு சிகரத்தில் ஏறு பாடலில், ‘என் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா’ எனும் வரிகள் இடம் பெறும்.
இந்நிலையில் மேற்கண்ட பாபா பட பாடல் குறித்து பேசிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “அண்ணாமலை பாடலில் கூட தமிழுடன் கனெட்க் பண்ணி பாடல் வரிகள் வரும். அவருடைய நிஜ வாழ்க்கையும் அப்படியேதான் இருக்கும், மக்கள் அவரை அப்படியே ஏற்கிறார்கள். அந்த வரிகளையும் எப்போதும் ஏற்றுக்கொள்வார்கள். வைரமுத்து சார் வரிகளை போடும்போது அது அப்படியே அமையும். மக்கள் அவரை விரும்புவார்கள்.
இதேபோல் இன்னொரு விஷயம் கொண்டையில் தாழ்ம்பூ பாடலில் கூட ஆடியன்ஸை பார்த்து ரஜினி சார் என்ன பூ என கேட்பார். அதுதான் ரஜினி சார்.. அவரிடம் ஒரு எக்ஸ்ட்ரா எப்போதும் இருக்கும். ஆனால் அதை மட்டுமேவும் நம்பி போக முடியாது. கதை - திரைக்கதையும் சேர்ந்துதான் அனைத்தும் அமைவது.” என குறிப்பிட்டார். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசும் மேலும் பல சுவாரஸிய விஷயங்களை இணைப்பில் உள்ள முழு பேட்டியின் வீடியோவின் காணலாம்.