டிக் டாக் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆன டான்சர் ரமேஷ் உயிரிழந்து போனது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த இவர், தெருக்களில் நடனமாடி அதன் மூலம் பிரபலம் அடைந்து பிரபல தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராகவும் களமிறங்கி இருந்தார்.
தொடர்ந்து தனது நடன திறமையால் ஒரு சில திரைப்படங்களிலும் தோன்றி இருந்தார் டான்சர் ரமேஷ். சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற அஜித் குமாரின் துணிவு திரைப்படத்திலும் தோன்றி இருந்தார்.
இந்த நிலையில், தனது பிறந்த நாள் தினமான நேற்று (27.01.2023) டான்சர் ரமேஷ் மறைந்துள்ளார். இது தொடர்பாக வெளியாகி இருந்த முதற்கட்ட தகவல்களின் படி, சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த டான்சர் ரமேஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, ரமேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது தாயார் மற்றும் முதல் மனைவி ஆகியோர் தெரிவித்திருந்தனர். இதனால், ரமேஷ் மரணத்தில் மர்மம் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்த நிலையில் டான்சர் ரமேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரபல டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் அங்கே வருகை தந்திருந்தார். முன்னதாக தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் ரமேஷ் பங்கெடுத்திருந்த போது அதில் நடுவராக டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இருந்தார். அப்போது இந்த வயதான சமயத்திலும் ரமேஷ் ஆடுவதை பார்த்து பெரிய அளவில் வியந்தும் போயிருந்தார் பாபா பாஸ்கர்.
அப்படி ஒரு சூழலில் தற்போது ரமேஷ் மரணம், பாபா பாஸ்கரை கடும் வேதனையில் ஆழ்த்தி இருப்பதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்த பாபா பாஸ்கர், உருக்கத்துடனும் காணப்பட்டிருந்தார் அந்த சமயத்தில் ரமேஷின் மனைவி கண்ணீரில் கதறி அழுதது பலரையும் நொறுங்க வைத்திருந்தது.
மேலும் நபர் ஒருவர், "டேய் பாபா மாஸ்டர் வந்திருக்காருடா. உனக்கு ரொம்ப புடிக்கும்ல்ல, பாபா மாஸ்டர் வந்திருக்காரு பாருடா" என்றபடி ரமேஷை அழைத்து கலங்கியபடியும் பேசிக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் அங்கிருந்தவர்களிடம் பேசிய பாபா பாஸ்கர், "திருப்பி நான் வருவேன், காரியத்துக்கு கண்டிப்பாக நான் வருவேன்" என கூறியபடி அங்கிருந்து கிளம்பி சென்றார்.