விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகை ரித்திகா திடீரென திருமணம் செய்து கொண்டார்.

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களுள் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா தமிழ் செல்வி. இவர் விஜய் டிவி பிரபலத்தை தற்போது எளிமையான முறையில் கோவிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. திருமணம் நடந்த பின்னர் கணவருடன் முதல் முறையாக எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டதை அடுத்து ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் செய்யும் போட்டியாளராக கலந்து கொண்ட ரித்திகா அதன் பின்னர் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பல விதமான கெட்டப்புகளை போட்டு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். அதை பார்த்த பலரும் ரித்திகா இவ்வளவு காமெடியாகவும் நடிப்பார் என்கிற புதிய கோணம் கிடைத்தது. இந்தநிலையில்தான் எளிமையான முறையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட ரித்திகா, கடவுளின் ஆசிர்வாதத்துடன் வினோ என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், இனி, தான் திருமதி.வினோ ஆகிவிட்டதாகவும் உருக்கமாக பதிவிட்டு, அனைவரின் அன்பும் ஆசியும் தங்களுக்கு வேண்டும் என்று புகைப்படங்களுடன் தெரிவித்திருக்கிறார்.
இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருவதுடன் சின்னத்திரை பிரபலங்களும் இயக்குனர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ராஜா ராணி சீரியல் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனராக இருக்கும் பிரவீன் பென்னட், இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோல் சின்னத்திரை நடிகர்கள் ஸ்ரீதேவி அசோக், பவித்ரா ஜனனி, பிரவீனா மற்றும் நடிகர்கள் திரவியம் ராஜகுமாரன், அக்ஷய் கமல் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.